Sunday, February 4, 2018

24/40 வேதவியாஸ அவதாரம்

24/40 வேதவியாஸ அவதாரம்

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்




கேள்வி: சத்யவதியின் பிறப்பு மிகவும் விசித்திரமானதுதானே?

பதில்: ’உபரிசர’ என்று ஒரு ராஜன் இருந்தார். இவருக்கு வேதங்களைப் படிப்பது, தான தர்மங்களைச் செய்வது ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. இவரது மனைவி பெயர் கிரிகெ. ஒரு முறை கிரிகை, தன் கணவரை தன்னுடன் உறவு கொள்ள அழைத்தாள். அதே சமயத்தில், அந்த ராஜனின் தந்தை, மான் மாமிசத்துடன் உணவு தயார் செய்யுங்கள் என்று ஆணையிட்டார். தந்தையின் ஆணையை மீறக்கூடாதென்று, உபரிசர ராஜன் தன் மனைவியின் வேண்டுகோளையும் மீறி, மான் வேட்டையாடுவதற்கு காட்டிற்குப் போனார். 

அழகான பசுமையான் காட்டில், ஒவ்வொரு நொடியும் தன் மனைவியை நினைத்து மருகினார் ராஜன். குயில்கள் தங்கள் அழகான குரல்களில் பாடியவாறு, பல்வேறு பூக்களிலிருந்து நறுமணத்தை எடுத்து நாற்புறமும் வீசும் தென்றல் காற்றுடன் இருந்த அந்த சூழ்நிலையில் ராஜன் தன் மனைவியின் இன்மையை நினைத்தார். ராஜனின் வீர்யம் வெளியாயிற்று. தன் வீர்யம் வீணாகக்கூடாதென்று, அதனை எப்படியாவது தன் மனைவியிடம் சேர்ப்பிக்கவேண்டும் என்று நினைத்தார். அந்த வீர்யத்தை ஒரு இலையில் சேகரித்து, ஒரு பருந்திடம் கொடுக்கவேண்டி, அந்தப் பறவையை அழைத்தார்.

‘என் பிரியத்திற்குரிய பறவையே. எனக்கு மகிழ்ச்சியைத் தருவாயாக. என்னுடைய இந்த வீர்யத்தைக் கொண்டுபோய், அரண்மனையில் இருக்கும் என் மனைவியான கிரிகெவிடம் கொடுத்துவிடு. இதைக் கொடுப்பதற்கு அவளுக்கு இதுவே தக்க காலம்’.

ராஜன் இப்படிக் கூறியதும், அப்பருந்து அந்த வீர்யத்தை தன் வாயில் கவ்வி எடுத்துக்கொண்டு பறந்தது. எதையோ எடுத்துக்கொண்டு இப்பருந்து இப்படி வேகத்துடன் பறக்கிறதே என்று எண்ணிய இன்னொரு பருந்து, ஒருவேளை இது மாமிசமாக இருக்குமோ என்று சந்தேகித்தது. உடனே எதிரில் வந்து அதன் வழியை மறைத்தது. ராஜனின் வேண்டுகோளை ஏற்று பறந்துகொண்டிருந்த பறவை, தன் எதிரில் வந்த பறவையைத் தாக்குவதற்கு தயாரானபோது, அதற்குத் தெரியாமலேயே அந்த வீர்யமானது, கீழே ஓடிக்கொண்டிருந்த யமுனா நதியில் விழுந்தது. 

அத்ரிகே என்னும் அப்சரஸானவள், பிரம்மதேவனின் சாபத்தில் ஒரு மீனாக மாறி, அந்த யமுனா நதியில் பற்பல ஆண்டுகளாக நீந்திக்கொண்டிருந்தாள். இந்த வீர்யத்துக்காகவே காத்திருந்ததைப் போல, அது நதியில் விழுந்ததும், நீந்திப்போய், அத்ரிகே ஆனவள் அதை விழுங்கி உடனே கர்ப்பவதி ஆனாள். 

ஒன்பது மாதங்கள் ஆனபோது, மீனின் ரூபத்தில் இருந்த கர்ப்பிணியான அத்ரிகே, ஒரு மீனவனின் வலையில் மாட்டினாள். மீனின் விசித்திரமான தோற்றத்தைக் கண்ட மீனவன் ஆச்சரியமடைந்து, அதை மிகவும் பத்திரமாக எடுத்துக் கொண்டு போனான். வளர்பிறை சந்திரனைப்போல் அழகான, இரு குழந்தைகள் அந்த மீனிலிருந்து வெளிவந்தன. பிரம்மனின் சாபம் நீங்கிய அப்சரஸ், அந்த இரு குழந்தைகளையும் ஆசிர்வத்து, பின் ஸ்வர்க்க லோகத்திற்குப் புறப்பட்டாள். ’உனக்கு மனித வடிவில் குழந்தைகள் பிறந்தவுடன் உன் சாபம் விலகும்’ என்று முன்னர் பிரம்மதேவர் சொல்லியிருந்தார். 

இந்த இரு குழந்தைகளும் மிகவும் அசாதாரணமானவை என்று எண்ணிய அந்த மீனவன், அக்குழந்தைகளை ராஜனிடம் எடுத்துச் சென்று, அவை பிறந்த கதையினை சொன்னான். ராஜன், ஆண் குழந்தையை மட்டும் தான் வைத்துக்கொண்டு, பெண் குழந்தையை அம்மீனவனுக்கே கொடுத்து வளர்த்து வரச் சொன்னான். 

அந்த ஆண்குழந்தை பின்னர் ‘மத்ஸ்யராஜன்’ என்று புகழ்பெற்றது. மீனவனின் வீட்டில் வளர்ந்த பெண் குழந்தை ‘மத்ஸ்யகந்தி’ என்று பெயர்பெற்றது. அவர்கள் அவளை ‘சத்யவதி’ என்று பெயரிட்டு அழைத்தனர். இவளே பின்னர் வேதவியாஸதேவரின் தாய் ஆனாள்.

கே: பராசரர் - சத்யவதி. இவர்களின் சந்திப்பு எப்படி நடந்தது?

ப: ஒருமுறை தீர்த்தயாத்திரைக்காக புறப்பட்ட பராசரர், யமுனா நதிக்கரைக்கு வந்தார். அப்போது அங்கு தோனியைப் பிடித்தவாறு நின்றிருந்த, மிகவும் அழகான கண்களையுடைய, சத்யவதியைக் கண்டு ஆசை கொண்டார். தம் ஞானதிருஷ்டியில், முன்னர் நடைபெறப்போகும் வேதவியாஸரின் பிறப்பு மற்றும் சிறப்புகளைக் கண்டார். 

கே: அவர்கள் இருவரும் அப்போது என்ன பேசிக்கொண்டனர்?

ப: 
பராசர: ஹே அழகானவளே. இந்தப் படகினை செலுத்தும் படகோட்டி எங்கே?

மத்ஸ்யகந்தி: நான் தாசராஜனின் மகள். இந்தப் படகினை நானே செலுத்தப் போகிறேன். ஆயிரம் பேர் கொள்ளும் பெரிய படகினையும்கூட செலுத்தும் வல்லமை உடையவள் நான். பராசர: ஹே வசுபுத்ரியே. படகினை செலுத்தத் துவங்கு. என் கமண்டலமானது 500 மக்களின் எடையைக் கொண்டதாகும். நானும் 500 மக்களின் எடையைக் கொண்டவன். மொத்தம் 1000 பேர் இருக்கிறார்கள் என்றாயிற்று. படகினை விரைவாகச் செலுத்து. 

அப்படியே ஆகட்டும் என்று கூறியவாறு, மத்ஸ்யகந்தி, படகினை செலுத்தத் துவங்கினாள். படகினை செலுத்தும் மத்ஸ்யகந்தியின் அழகில் மயங்கிய பராசரர், அவளை அடைய வேண்டும் என்று எண்ணினார். 

மத்ஸ்யகந்தி: வணக்கத்துக்குரியவரே. நான் என்றைக்கும் என் தந்தையில் கட்டுப்பாட்டில் இருக்கும் கன்னிப்பெண். உங்களைச் சேர்ந்து, என் கன்னித்தன்மையை நான் இழந்தால், பிறகு எந்த முகத்தைக்கொண்டு என் தந்தையிடம் போவேன்? பிறகு என் வாழ்க்கை என்ன ஆகும்? 

பராசர: அழகானவளே. எனக்கு நீ மகிழ்ச்சி அளித்தாலும், பிறகும் நீ உன் கன்னித்தன்மையை இழக்காமல் இருப்பாய். அதைப் பற்றிய கவலை வேண்டாம். இன்று வரை எப்படி இருந்தாயோ, அப்படியே பிறகும் தொடர்வாய். உனக்கு மிகவும் பிடித்தவாறு வேறு ஏதாவது ஒரு வரத்தைக் கேள்.

மத்ஸ்யகந்தி: மரியாதைக்குரிவரே. மீனின் வாசனையால் நிரம்பிய என் உடல் மிகவும் துர்நாற்றம் அடிக்கிறது. அதனை சீராக்கி, நறுமணம் வருமாறு செய்யுங்கள்.

பராசர: அப்படியே ஆகட்டும். இன்றிலிருந்து உனக்கு ‘யோஜனகந்தி’ என்று பெயர் உண்டாகட்டும்.

கே: இதற்குப் பிறகு வேதவியாசர் எப்படி தோன்றினார்?

ப: சத்யவதியின் மனதை மாற்றிய பராசரர், வேதவியாசரின் அவதாரம் என்னும் உத்தம காரியத்திற்காக தியானம் செய்யத் துவங்கினார். மிகவும் உத்தமளான, தபஸ்வினியான, அழகான நறுமணம் கொண்ட உடலைக் கொண்ட சத்யவதியுடன் கூடினார். 

அந்தக் க்‌ஷணத்திலேயே, யமுனா நதிக்கு நடுவில் ஒரு தீவில், மகா சாமர்த்தியசாலியான நாராயணன், பராசரரின் மகனாக அவதரித்தார். 

கே: அந்த மகனை எப்படி வளர்த்தனர்?

ப: 
ஜாதமாத்ர: ஸ வவ்ருதே ஸப்தவர்ஷோSபவத் ததா ||

பிறந்த உடனேயே, வேதவியாசதேவர் ஏழு வயது பாலகனாக மாறினார். 

தோன்றியவுடனேயே ஏழு வயதான வேதவியாசர், தந்தையிடமிருந்து உபநயன சம்ஸ்காரத்தை, இந்த உலகமோகனத்திற்காக செய்துகொண்டார். தன் திவ்யஸ்வரூபத்தைப் பற்றி தன் தந்தைக்கு உபதேசித்தார். தாய்-தந்தையர் எப்போது தன்னை நினைக்கிறார்களோ, அந்த நொடியிலேயே தான் அவர்கள் முன் காட்சி தருவேன் என்று வரம் அளித்தார். 

கே: வேதவியாசரின் வெவ்வேறு பெயர்களுக்கான காரணங்கள்?

ப: 
த்வீபாயன - யமுனா நதியில் ஒரு தீவினில் பிறந்ததால், இவருக்கு த்வீபாயன என்று பெயர் வந்தது.
கிருஷ்ண த்வையாபன - நீல வண்ண உடலைக் கொண்டிருந்ததால், இவரை கிருஷ்ண த்வைபாயனர் என்று அழைத்தனர். 
வேதவியாசர் - வேதங்களை நான்கு பாகங்களாகப் பிரித்ததால், இவர் வேதவியாசர் என்று அழைக்கப்பட்டார். 
பாதராயண - பதரியில் நிலைத்திருந்ததால், இவர் பாதராயணர் என்று அழைக்கப்பட்டார். 

கே: இவரது நிஜமான பெயர் வேதவியாசர்தானே?

ப: வியாச - என்பது வேதங்களைப் பிரிப்பவரின் பெயரே தவிர, அது கிருஷ்ணத்வைபாயனரின் நிஜமான பெயர் அல்ல. வெவ்வேறு மகாயுகங்களில், வெவ்வேறு ஆட்கள், வேதவியாசர் ஆகின்றனர். 

இந்த கல்பத்தில், கிருஷ்ணத்வைபாயனர், வேதவியாசர் ஆகியிருக்கிறார். முந்தைய கல்பத்தில் அஸ்வத்தாமர், வேதவியாசர் ஆகிறார். 

கே: அப்படியென்றால், வேதவியாசர் எவ்வளவு பேர்?

மொத்தம் 27 வியாசர்கள் இருக்கின்றனர். 

1. ஸ்வயம்பு
2. ப்ரஜாவதி
3. உஷன
4. பிரம்மஸ்வதி
5. ஸவித்ரு
6. ம்ருத்யு
7. மகவ
8. வசிஷ்ட
9. ஸாரஸ்வத
10. த்ரிதாம
11. த்ரிஷிக்
12. பாரத்வாஜ
13. அந்தரிக்‌ஷ
14. தர்ம
15. த்ரையாகுண
16. தனஜ்சய
17. மேதாதிதி
18. ப்ரதி
19. அத்ரி
20. கௌதம
21. உத்தம
22. வேனவாஜப்ரஜாக்‌ஷ (வேனராஜஷ்ரவஸ்)
23. சோமஸுஷ்மாபன
24. த்ருணபிந்து
25. பார்கவ
26. சக்தி
27. ஜாதுகர்ண.

கே: உபநயனம் ஆனபிறகு வியாஸர் என்ன செய்தார்?

ப: வேதவியாஸர், மேரு பர்வதத்திற்குச் சென்றார். பிரம்மாதி தேவர்கள் அனைவரும் அவரை பின்தொடர்ந்தனர். ஸ்ருஷ்டியின் துவக்கத்தில் வேதங்களை எப்படி காப்பாற்றினாரோ, அதைப்போலவே, அஞ்ஞானம் மற்றும் தவறான ஞானங்களால் மாசுபட்ட வேதங்களை மறுபடி பாகம் பிரித்து, தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் உபதேசித்தார். 

கே: வேதங்களை எப்படி பாகம் பிரித்தார்?

ப: ரிக்வேதத்தை 24 பிரிவுகளாக, யஜுர்வேதத்தை 101 பிரிவுகளாக, சாமவேதத்தை 1000 பிரிவுகளாக, அதர்வவேதத்தை 12 பிரிவுகளாகப் பிரித்தார். 

கே: பிரம்மமீமாம்ச சாஸ்திரத்தை இயற்றுவதற்கு என்ன காரணம்?

ப: அனைத்து வேதங்களையும், பிரித்து உபதேசம் செய்தபிறகு, அந்த வேதங்களின் பொருளை விளக்கும், பிரம்மமீமாம்ச சாஸ்திரத்தை இயற்றினார். 562 சூத்திரங்களாலான பிரம்மசூத்திரங்கள்,  தத்வஞானத்தைப் பெறுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. ஸ்ரீஹரியைப் பற்றி ‘இதமித்தம்’ என்னும் விஷயத்தை விளக்குகின்றன. நிர்ணயசாஸ்திரம் என்றே புகழ்பெற்ற பிரம்மமீமாம்ச சாஸ்திரமானது, விஷ்ணுவை ஆராதிக்கின்றது. அது வேதங்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பதால், பரவித்யை என்று அழைக்கப்பட்டது. 

கே: மகாபாரதத்தின் சிறப்பு என்ன?

ப: அனைத்து சாஸ்திரங்களுக்கும் உதாரணமாக, வேதங்களைவிட உத்தமமான ‘மகாபாரதம்’ என்னும் கிரந்தத்தை இயற்றினார். பிரம்ம ருத்ரர் முதலான தேவர்களுக்கு தானே அதை உபதேசித்தார். கௌரவர்கள் மற்றும் பாண்டவரகள் பிறப்பதற்கு முன்பே இந்த மகாபாரத்தை இயற்றி, உபதேசித்தார் என்பது இன்றைக்கும் அனைவருக்கும் ஆச்சரியம் தரக்கூடிய விஷயம். இந்த மகாபாரதமும் நிர்ணய சாஸ்திரம் என்றே அழைக்கப்படுகிறது. 

கே: இவ்வளவு ஞானபிரசாரம் செய்ததால், கலிதோஷம் மற்றும் அஞ்ஞானம் மறைந்தது அல்லவா?

ப: வியாசர் தம் முக-கமலத்திலிருந்து வெளிவந்த ஞானத்தை, ருத்ரர் முதலான தேவர்களுக்கு உபதேசித்து, அவர்களின் மனங்களில் நிலைத்திருக்கும் கலியின் தலையை கத்தரித்தார். அனைத்து தேவதைகளுக்கும் ஞானாம்ருதத்தை குடிக்கச் செய்தார். ஆனால், சாத்விக மனிதர்களின் மனதில் இருக்கும் கலி மட்டும் இன்னும் கொல்லப்படாமல் அப்படியே இருந்துவிட்டார். மனுஷ்யோத்தமர்களின் மனதில் இருக்கும் கலியை நாசம் செய்வதற்கு, வேதவியாசதேவர் தீர்மானிக்கிறார். 

காலப்போக்கில் மனிதனின் புத்தி, ஆயுள், செய்யும் கர்மங்கள் என அனைத்தும் குறைந்துகொண்டே போவதை அவர் கவனித்தார். குறைந்தபட்சம் வேத அத்யயனம் செய்வது ஒருவரின் கடமை என்றார். பாகவதம் முதலான புராணங்களை இயற்றி, மனிதர்களுக்கு வழங்கினார். 

உலகத்தின் அனைத்து பாகங்களுக்கும் வேதவியாசதேவர் பயணித்து, அஞ்ஞானத்தை நாசம் செய்யும் முயற்சியில் இறங்கினார். 

கே: ஒரு கிருமியின் உதவியுடன் அரசாட்சி செய்த சூழ்நிலை என்ன?

ப: ஒரு முறை வழியில் ஒரு பூச்சி சென்றுக்கொண்டிருந்தது. அதனை தடுத்து நிறுத்தி, ‘ஏன் இவ்வளவு வேகமாகப் போகிறாய்?’ என்று வியாசர் கேட்டார். மேலும், ‘ஹே பூச்சியே, இந்த உன் உடலை விட்டுவிடு. அடுத்த பிறவியில் உன்னை பெரிய ராஜனாக மாற்றுகிறேன்’ என்றார். 

வேதவியாசதேவரின் இந்தப் பேச்சுக்கு அந்தப் பூச்சி ஒப்புக்கொள்ளவில்லை. தன் பூச்சி உடலின் மேலிருந்த பிரியத்தால், அந்த உடலை விட்டுவிட அது தயாராக இல்லை. அப்போது வேதவியாசர், ’போன பிறவியில் நீ ஒரு பக்த சூத்ரனாக இருந்தாய். ஆனால் மிகவும் கருமியாக இருந்ததினால், உனக்கு இப்போது இந்த பூச்சி ஜென்மம் வந்திருக்கிறது. உன்னை இதே உடலிலிருந்தே நான் ராஜனாக மாற்றுகிறேன்’ என்றார். 

வேதவியாசரின் அருளினால், அந்த பூச்சி அப்படியே ராஜனாக மாறியது. மற்ற ராஜாதிராஜர்கள் அனைவரும் வந்து அந்த பூச்சிக்கு தலைவணங்கி மரியாதை செலுத்தினர். 

கே: அந்த பூச்சிக்கு எப்படி மோட்சத்தை வழங்கினார்?

ப: வேதவியாசர் அந்த பூச்சியைப் பார்த்து பேசத் துவங்கினார். ‘உனக்கு இந்த நொடியிலேயே மோட்சத்தைக் கொடுப்பதற்கும் நான் தயார். ஆனால், நீ பிராமண ஜென்மம் எடுத்தே மோட்சத்திற்குப் போகவேண்டும் என்று உனக்கு எழுதப்பட்டிருக்கிறது. ஆகையால், அடுத்த பிறவியில் நீ பிராமணனாகப் பிறப்பாய். அப்போது உனக்கு மோட்சம் கிடைக்கும்’ என்று ஆசிர்வதித்தார். 

அந்த பூச்சிக்கு ஒரு தூய்மையான பிறவியை வேதவியாசர் அருளினார். மொத்த பூமண்டலத்தையே அந்த பூச்சி அரசாட்சி புரிந்தது. இறுதியில் அந்த உடலைத் துறந்து, பிராமணனாகப் பிறந்தது. நல்ல தத்வஞானத்தைப் பெற்று, ஹரிபாதங்களை சேர்ந்தது. இப்படி வல்லவரான வேதவியாசதேவர், பல சஜ்ஜனர்களை அவர்களின் வாழ்க்கைச் சுழற்சியிலிருந்து விடுதலை அளித்தார். ஸ்ரீஹரியின் லீலைகள், தேவர்களின் கற்பனைக்கும் எட்டாத மிக அற்புதமான ஒன்று.

கே: வேதவியாசர், ருத்ரதேவரைக் குறித்து ஏன் தவம் செய்தார்?

ப: ருத்ரர், வேதவியாசரின் மகனாகப் பிறப்பதற்காக தவம் மேற்கொண்டார். நீயே என் மகனாகப் பிறப்பாய் என்று வேதவியாசரும் சிவனைக் குறித்து தவம் செய்தார். ஆனால், வேதவியாசர் செய்த தவம் என்பது வெறும் அசுர-மோகனத்திற்காக மட்டுமே. எந்தக்காலத்திலும் அவரிடம் குறைகளைக் கண்டுபிடிக்கக்கூடாது. ருத்ரருக்கும் வேதவியாசர், அவர் வேண்டியதைப்போல் வரம் அளித்தார்.

கே: சுகாசார்யர் பிறந்தது எப்படி?

ப: ஒருமுறை அரணியைக் கடைந்துகொண்டிருந்தபோது, ‘க்ருதாசி’ என்னும் அப்சரஸ் பிறந்து, ஒரு கிளியாக வந்தாள். அவளைக் கண்ட உடனேயே, வேதவியாசரின் வீர்யம் வெளிவந்தது. அப்போது, ருத்ரர், ‘சுக’ என்னும் பெயரில் அவதாரம் செய்தார். 

கே: க்ருதாசியை மோகித்தது எப்படி நியாயமாகும்?

ப: க்ருதாசியை வேதவியாசதேவர் மோகிக்கவில்லை. அசுர-மோகனத்திற்காகவே அவர் இத்தகைய நாடகத்தை நடத்தினார். அரணியைக் கடைந்து, சுகனை பிறக்கவைத்து, க்ருதாசியின் விருப்பத்தின் பேரிலேயே, ‘சுக’ என்னும் பெயர் வைத்தார். வேதவியாசருக்கு சேவை செய்வதற்காக, வாயுதேவர் தான் சுகனின் உடலில் கலந்தார். சுகனுக்கு வேதவியாசர், சர்வக்ஞத்வத்தை வழங்கினார். அனைத்து வேதங்களையும், மகாபாரதத்தையும், பாகவத மற்றும் வைஷ்ணவ புராணங்களையும் உபதேசம் செய்தார். 

கே: வேதம் முதலான சாஸ்திரங்களை உருவாக்கியவர் யார்?

ப: 
ரிக்வேதம் - பைல
க்ருஷ்ண யஜுர்வேதம் - வைசம்பாயன
சுக்ல யஜுர்வேதம் - சூர்ய
சாம வேதம் - ஜைமினி
அதர்வ வேதம் - சுமந்து 
மகாபாரதம் - வைசம்பாயன 
இப்படி மேலே சொல்லப்பட்ட முனிவர்கள் அந்தந்த வேதங்களை உருவாக்குவதற்கு வேதவியாசர் அருளினார். 

கே: மனிதர்களுக்கு யார் உபதேசம் செய்தார்?

ப: மகனான சுகாசார்யருக்கு அனைத்து சாஸ்திரங்களையும் உபதேசித்து மனிதர்களின் உலகத்தில், கந்தர்வ லோகத்தில் அவற்றை பிரசாரம் செய்வதற்காக ஆணையிட்டார். தேவலோகத்தில் பிரசாரம் செய்வதற்கு நாரதரை அனுப்பினார். 

கே: ரோமஹர்ஷணர் பிறந்தது எப்படி?

ப: ஒருமுறை வேதவியாசர், மெய்சிலிர்த்து, அதிலிருந்து ரோமஹர்ஷணரை பிறப்பித்தார். அவருக்கு மகாபாரதம், புராணம், மூலராமாயணம், பஞ்சராத்ரங்கள் ஆகியவற்றை உபதேசித்து, அதன் ஞானபரம்பரையை முன்னெடுத்துச் செல்லுமாறு ஆணையிட்டார். வேதவியாசரை பூஜிக்க வேண்டி, ரோமஹர்ஷணரிடம் காமன் பிரவேசித்தான். 

கே: தைவிமீமாம்சம் இயற்றப்பட்டது எப்போது?

ப: சனத்குமார முதலான ரிஷிகளை த்யானயோகத்தை துவக்கச் செய்தார். ப்ருகு ரிஷிகளை கர்மயோகத்தை துவக்கச் செய்தார். ஜைமினி ரிஷிகளை கர்மமீமாம்ச சாஸ்திரத்தை துவக்கச் செய்தார். 

தைவிமீமாம்சத்தின் முதல் மற்றும் இறுதி பாகங்களை தானே இயற்றி, நடுவில் இருக்கும் பாகத்தை இயற்ற, பைல முனிவர் மற்றும் சேஷதேவருக்கு ஆணையிட்டார். இப்படி நாராயணன், வேதவியாஸ ரூபத்தில் அவதாரம் செய்து பூலோகத்தில் அனைத்து இடங்களிலும் ஞானாம்ருதத்தை பொழியச் செய்தார். 

கே: வேதவியாஸ மந்திரத்தின் சிறப்பு என்ன?

ப: இந்த பூலோகத்திற்கு மட்டுமல்லாமல், வேதவியாசர், அனைத்து 14 லோகங்களுக்கும் குருவானவர். வேதவியாஸதேவரின் முக-கமலமானது, மொத்த 14 லோகங்களிலிருக்கும் ஞான சமுத்திரத்தின் ஊற்றாகும். ஆகையாலேயே ‘வியாஸோச்சிஷ்டம் ஜகத்ஸர்வம்’ என்னும் வாக்கியம் பிரபலமடைந்திருக்கிறது. 14 லோகத்திற்கும் குருவான ஸ்ரீவேதவியாசர், நம் பாரதத்தில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அவதரித்து, இன்றும் மேல் பத்ரியில் ரிஷிமுனிகளுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார். 

வாழ்க்கையில் யாருக்கு மனதை ஒருமுகப்படுத்துதல், நினைவாற்றல் ஆகியன குறைவாக இருக்கிறதோ, அவர்கள் வேதவியாஸ மந்திரத்தை ஜெபித்தால், அந்தக் குறைகளிலிருந்து விடுபட்டு புகழ்பெறுவார்கள்.

கே: வேதவியாஸ அவதாரத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

ப: 
* ஒவ்வொருவரும் தாம் சந்திக்கும் அனைத்து குருகளுக்கும், மூலகுருவாக வேதவியாசர் இருக்கிறார் என்ற உணர்வு.
* அவரே நம் அனைவருக்கும் குரு. 
* எந்தவொரு குருவிடமிருந்தும் உபதேசம் பெற்றாலும், அவருக்கு மரியாதை செலுத்தும்போது, அந்த குருவிற்கு உள் இருக்கும் வேதவியாஸ தேவரை மறக்காமல் நினைக்கவேண்டும். 
* ‘வேதவியாஸ’ என்னும் பெயரை எப்போதுமே நினைத்தவாறு இருக்கவேண்டும். நீங்கள் எப்பேர்ப்பட்ட ஞானியாக ஆவீர்கள் என்று, பிறகு பாருங்கள். அவருடைய சக்தி / மகிமை எப்பேர்ப்பட்டது என்று உங்களால் ஊகிக்க முடியாது. 

கே: தந்த்ரசார சங்க்ரஹத்தின்படி வேதவியாஸரை எப்படி வணங்கவேண்டும்?

ப:
விஞ்ஞானரோசி: ப்ரதிபூரிதாந்தம் பாஹ்யாண்டகோசம் ஹரிதோபலாபம் |
தர்காபயேதம் விதிஷர்வபூர்வ கீர்வாண விஞ்ஞானத மானதோஸ்மி ||

விஞ்ஞானம் என்னும் ஒளியினால் பிரம்மாண்டத்திற்கு உள்ளே மற்றும் வெளியே நிறைந்திருப்பவரும், மரகதமணியைப் போல் தூய்மையான ஒளி உள்ளவருமான, ஞான, அபய முத்திரைகளைக் கொண்டவருமான, பிரம்ம, ருத்ர முதலானவர்களுக்கு விஞ்ஞானத்தை உபதேசித்துக் கொண்டிருப்பவருமான வேதவியாஸரை வணங்குகிறேன். 

த்யாயேச்சஷாங்க ஷதகோட்யதி சௌக்ய காந்திம்
சன்சிச்யமானம் அம்ருதோருகடை: சுரேஷை: |
வர்ணாபிமானி பிரஜேஷமுகை: ஸஹைவ
பஞ்சாஷதா ப்ரதிகிரந்தம் அசேஷவித்யா: ||

100கோடி சந்திரர்களின் ஒளியைக் காட்டிலும் அதிக ஒளியைத் தரக்கூடியவரும், அ-முதல் அனைத்து எழுத்துக்களின் அபிமானிகளான பிரம்ம, ருத்ர ஆகிய தேவர்களால், அமிர்த கலசங்களினால் அபிஷேகம் செய்யப்படுபவரும், வேதம் முதலான அனைத்தையும் பிரம்மன் முதலானவர்களுக்கு உபதேசம் செய்துகொண்டிருப்பவருமான வேதவியாஸரை தியானிக்க வேண்டும். 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***


No comments:

Post a Comment