Wednesday, February 7, 2018

27/40 அஜித அவதாரம்

27/40 அஜித அவதாரம்

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்



கே: அஜித என்னும் ஸ்ரீஹரியின் அவதாரம் நடைபெற்றது எப்போது?

ப: சாக்‌ஷுஷ மன்வந்தரத்தில்.

கே: அவதாரத்தின் வேலை என்ன?

ப: அனைத்து தேவர்களுக்கும் அமிர்தத்தைத் தருவதற்காக பாற்கடலை கடையும் அவதாரம். 

கே; பாற்கடலை கடையும்முன்னர், ஸ்ரீஹரி அவதாரம் எடுக்கவில்லை. மூலரூபியின் அனுமதியில் தேவர்கள் அசுரர்களும் கடைவதை துவக்கினர். அப்படிதானே?

ப: அசுரர்களின் தொந்தரவு தாங்காமல் தேவர்கள், பிரம்மதேவரிடம் சென்று முறையிட்டனர். பிரம்மன் அனைத்து தேவர்களையும் அழைத்துக்கொண்டு, ஸ்ரீஹரியிடம் சென்றார். அற்புதமான முறையில் ஸ்ரீஹரியை ஸ்தோத்திரம் செய்தார். அவருடன் தேவர்களும் வணங்கினர். 

நமஸ்துப்யம் அனந்தாய துர்விதர்காத்ம கர்மணே |
நிர்குணாய குணேசாய ஸத்யஸ்தாய ச சாம்ப்ரதம் ||
அஜாய ஜன்மஸ்திதி ஸம்யமாய குணாய நிர்வாண ஸுகார்ணவாய |
அணோரணீன்மேS பரிகண்யதாம்னே மஹானுபாவாய நமோ நமஸ்தே ||

இப்படி ஸ்தோத்திரம் செய்தபோது, அஜித நாமக ஸ்ரீஹரி தோன்றினார். 

கே: பாற்கடல் கடையும் நேரத்தில் அஜிதரூபியான ஸ்ரீஹரியே அதை முன்னின்று நடத்தினார் என்று சிலர் சொல்கின்றனர். நீங்கள், அவர் அஜிதனாகத் தோன்றினார் என்று கூறுகிறீர்கள். இவற்றில் எது சரி?

ப: இரண்டுமே சரிதான். பாற்கடலை கடையும்போது அஜிதரூபியான ஸ்ரீஹரியே அதை நடத்தினார். அதற்கு முன், பிரம்மன் மற்றும் தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கோடி சூரியர்களை விடவும் அதிக ஒளியுடையவராக, பற்பல அணிகலன்களை அணிந்தவராக, பிரம்மதேவரின் எதிரில் காட்சியளித்தார். பாற்கடலை கடையும் யோசனையையும் அஜிதரூபியான ஸ்ரீஹரியே தெரிவித்தார்.

அரயோபி ஹி ஸந்தேயா: ஸதி கார்யார்த்த கௌரவே |
அஹிமோஷிகவத்தேவா ஹைர்தஸ்ய பதவீம் கதை: ||

கே: அஜிதன் என்றால் என்ன பொருள்? அஜிதனை எப்படி வணங்கவேண்டும்?

ப: பாகவத பத்தாவது ஸ்கந்தத்தில், யாராலும் வெல்லப்பட முடியாதவன் ஆகையால், அஜிதன் என்று பெயர் பெற்றிருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

ஜயஜய ஜஹ்யஜாமஜித தோஷகைஹேத குணாம் |
த்வமஸி யதாத்மனா ஸமவருத்த ஸமஸ்தபக: ||

என்றும் வெல்லப்பட முடியாத அஜிதனே | உனக்கு ஜெயம் ஆகட்டும் | உன் கல்யாண குணங்களை மறந்தவர்களை நீ நாசம் செய்.

கே: அஜிதரூபியான ஸ்ரீஹரி, பாற்கடல் கடைவதை முன்னின்று நடத்தியவர் மட்டுமா அல்லது தேவர்களுடன் சேர்ந்து நின்று பாற்கடலை கடைந்தவரா?

ப: துவக்கத்திலிருந்து இறுதிவரை அந்தர்யாமியாக இருந்து பாற்கடலை கடைந்தவர், இந்த அஜிதரூபியான ஸ்ரீஹரி.

கே: மந்தரமலையை கொண்டுவந்தவர்கூட அஜிதரூபியான ஸ்ரீஹரியே என்று சொல்கின்றனர். இது சரியா?

ப: ஆம். அனைத்து தேவர்களும் மந்தரமலையின் அதிக எடையினால் அதைத் தூக்கமுடியாமல் போனபோது, அஜிதரூபியான ஸ்ரீஹரி அங்கு தோன்றி, அந்த மலையை தானே தூக்கி வந்து, கருடனின் மேல் வைத்தார். கருடன் மேலும் அமர்ந்து, தானே அந்த மலையைத் தூக்கிவந்தார். அனைத்து தேவர்களின் உள்ளேயும், அனைத்து தைத்யர்களின் உள்ளேயும், மலைக்கு உள்ளும், வாசுகியின் உள்ளும் தானே நின்று, கடைவதைச் செய்தார்.

கே: ஆனால் மந்தரமலையைத் தூக்கி நிறுத்தியவர், கூர்ம ரூபியான ஸ்ரீஹரி என்று சொல்கிறார்களே?

ப: ஆம். இதே அஜிதரூபியான ஸ்ரீஹரி, கூர்மரூபத்தை எடுத்து மலையை தாங்கினார். மலை உடைந்துவிடக்கூடாதென்று, மலையின் உள்ளே, வெளியே மற்றும் கீழே தானே நின்றார். இப்படியாக பாற்கடலைக் கடைய உதவியாக இருந்து, தேவர்களுக்கு அமிர்தத்தைப் பெற்றுத் தந்தார். 

கே: அஜிதரூபியான ஸ்ரீஹரியை யார், எப்படி வணங்கினர்?

ப: அனைத்து தேவர்களுக்கும் மிகவும் பிடித்தமான ரூபம் அஜிதன். தங்கள் அனைவருக்கும் அமிர்தத்தைக் கொடுத்த ரூபம் ஆகையால் அஜிதனை அனைத்து தேவர்களும் மிகவும் விருப்பப்பட்டு வணங்கினர்.

கே: அஜிதரூபியான ஸ்ரீஹரியைக் குறித்து ஏதேனும் ஸ்தோத்திரம் உள்ளதா? மற்றும் அவரை நாம் எவ்வாறு வணங்கவேண்டும்?

ப: ஸ்ரீமதாசார்யர், மிகவும் அழகாக அஜிதனைக் குறித்து ஸ்துதித்துள்ளார். த்வாதச ஸ்தோத்திரத்தில்:

விஸ்வஸ்திதி ப்ரளயசர்க மஹாவிபூதி
விருத்திபிரகார நியமாவிருதி பந்தமோக்‌ஷா:
யஸ்யா அபாங்க லவமாத்ரத ஊர்ஜிதாஸா
ஸ்ரீயத் கடாக்‌ஷ பலவத்யஜிதம் நமாமி ||

கே: அஜிதரூபியான ஸ்ரீஹரியின் ரூபத்தைப் பற்றிய விவரங்கள் ஏன் அதிகம் வெளியாகவில்லை?

ப: அஜிதரூபியான ஸ்ரீஹரி, பற்பல (அனந்த) அவதாரங்களில் முதலிலேயே இருப்பவர். இவரை அனைவரும் கண்டிப்பாக வணங்கியே ஆகவேண்டும். பஞ்சரூபங்களில் - வாசுதேவ, தசாவதாரங்களில் - மத்ஸ்ய, 24 ரூபங்களில் - கேசவ, 100 ரூபங்களில் - அஜ, 1000 ரூபங்களில் - விஸ்வ என்று துவக்க ரூபங்களில் எப்படி உள்ளனவோ, அதைப்போலவே ஸ்ரீஹரியின் பற்பல (அனந்த) ரூபங்களில், அஜிதன் என்பது முதலாம் ரூபம். இதை வேதவியாஸ கத்யத்திலிருந்து அறியலாம். 

கே: அஜிதரூபியான ஸ்ரீஹரி, பாற்கடலை கடைவதற்காக தோன்றினார். இதைத்தவிர வேறு வேலைகள் ஏதேனும் செய்தாரா?

ப: ஒவ்வொரு மன்வந்தரத்திலும் ஒவ்வொருவர் இந்திர பதவியில் இருக்கிறார்கள். மொத்த சாக்‌ஷுஷ மன்வந்தரத்திற்கும் அஜிதரூபியான ஸ்ரீஹரியே - ஸ்வர்க்கத்திற்கு அதிபதியான இந்திர பதவியில் இருந்தார். இதைவிட பெரிய மகிமை / வேலை வேறென்ன இருக்கமுடியும்? இத்தகைய அஜிதனை நிரந்தரமாக வேண்டி, தன்யர் ஆவோமாக.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***


No comments:

Post a Comment