Tuesday, February 6, 2018

26/40 வைகுண்ட அவதாரம்

26/40 வைகுண்ட அவதாரம்

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்



கே: வைகுண்ட என்னும் ஸ்ரீஹரியின் அவதாரத்தின் சிறப்பு என்ன?

ப: ஒவ்வொருவரும் எந்த வைகுண்டத்திற்குச் செல்லவேண்டும் என்று நினைக்கின்றனரோ, அந்த வைகுண்டத்தை நிர்மாணித்த சிறப்பான அவதாரம் இது.

கே: இந்த அவதாரம் எப்போது நடைபெற்றது?

ப: ஐந்தாவது ரைவத மன்வந்தரத்தில்.

கே: இந்த அவதாரம் யாரிடம் நடைபெற்றது?

ப: ஷுப்ர மற்றும் விகுண்ட என்னும் தம்பதியினரிடம் வைகுண்ட என்னும் ரூபத்தில் ஸ்ரீஹரி அவதரித்தார்.

கே: ஷுப்ர மற்றும் விகுண்ட தம்பதியினருக்கு, வைகுண்ட என்னும் ஸ்ரீஹரியின் அவதாரம் மட்டும் மகனா அல்லது வேறு யாரும் வாரிசு இருந்தனரா?

ப: விகுண்டாதேவியிடம் பல தேவர்கள் பிறந்தனர். ஆகையால் அவர்களுக்கும் வைகுண்ட என்று பெயர் வந்தது. அங்கு ஸ்ரீஹரியும் அங்கு பிறந்து, வைகுண்ட என்ற பெயர் பெற்றார். 

பத்னீ விகுண்டா ஷுப்ரஸ்ய வைகுண்டை: சுரசத்தமை: |
தமோ: ஸ்வகலம் ஜக்ஞே வைகுண்டோ பகவான் ஸ்வயம் ||

கே: வைகுண்ட லோகத்தை நிர்மாணம் செய்யவேண்டுமென்ற நிலை எப்போது வந்தது?

ப: வைகுண்ட நாமகனான ஸ்ரீஹரி ரமாதேவியை மணமுடித்தார். அப்போது தாம் வசிப்பதற்காக ஒரு அழகான லோகத்தை நிர்மாணம் செய்யவேண்டி ரமாதேவி பிரார்த்தித்தார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க, ஸ்ரீஹரி வைகுண்டத்தை நிர்மாணித்தார். 

வைகுண்ட: கல்பிதோ யேன லோகோ லோகனமஸ்க்ருத; |
ரமயா ப்ரார்த்யமானேன தேவ்யா தத்ப்ரியகாம்யயா ||

கே: வைகுண்ட லோகத்திற்கு இந்தப் பெயர் வரக் காரணமென்ன?

ப: ரமாதேவியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஸ்ரீஹரி தாம் வசிப்பதற்கு கட்டிய லோகத்திற்கு, அவரின் பிரார்த்தனையின்படியே வைகுண்டம் என்று பெயர் வைத்தார். 

கே: இது ஸ்ரீஹரியின் லோகமாக இருந்தாலும், முக்தர்களின் லோகம் என்று எப்படி சொல்கின்றனர்?

ப: வைகுண்டம் என்பது ஸ்ரீஹரியின் இருப்பிடமாக இருந்தாலும், தன் வீட்டில் முக்தர்களுக்கு தரிசனம் அளித்து, அவர்களுக்குத் தேவையான சுகங்களைக் கொடுத்து அருள்கிறார். பக்தர்களுக்காகவே தான் கட்டிக்கொண்ட உத்தமமான லோகமே வைகுண்டம். 

கே: வைகுண்ட லோகம் அழிவில்லாது. பிரளய காலத்திலும் அழியாதது. அப்படியிருக்கும்போது ‘நிர்மாணம்’ செய்வது என்றால் என்ன பொருள்?

ப: ஸ்ரீஹரி தனது லீலைகளில் ஒன்றாக வெளிப்படுத்தியதையே, நிர்மாணம் என்கிறார்கள்.

கே: மோட்சம் என்றால் வைகுண்டத்திற்குப் போவது மட்டும்தானா, வேறு உலகங்களும் உள்ளனவா?

ப: ஸ்வேதத்வீப, அனந்தாசன, வைகுண்ட என்பதாக மூன்று உலகங்கள் உள்ளன. வைகுண்டத்தை விட அனந்தாசனம் உத்தமம். அனந்தாசனத்தைவிட ஸ்வேதத்வீபம் உத்தமம். 

கே: வைகுண்டரூபியான ஸ்ரீஹரியின் சிறப்பு என்ன?

ப: ஒவ்வொரு சாதகரும் இறுதியாக தனக்கு வேண்டுவது மோட்சம். மோட்சத்திற்குப் போனபிறகு, நிரந்தரமாக சுகத்தை அனுபவிக்கும் இடமே வைகுண்டம். இத்தகைய வைகுண்ட லோகத்தை அடையவேண்டுமெனில், வைகுண்ட என்னும் பெயரைப் பெற்ற ஸ்ரீஹரியின் அருள் கண்டிப்பாகத் தேவை.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.

***

No comments:

Post a Comment