Monday, February 5, 2018

25/40 ஹம்ஸ அவதாரம்

25/40 ஹம்ஸ அவதாரம்

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்





கேள்வி: ஹம்ஸ என்னும் ஸ்ரீஹரியின் அவதாரத்தின் சிறப்பு என்ன?

பதில்: ஹம்ஸ அவதாரம் மிகவும் சிறப்புடையது. அனைத்து உயிரினங்களும் உயிரோடு இருப்பதற்கு காரணமே இந்த ஹம்ஸரூபியான ஸ்ரீஹரிதான். 

கே: ஹம்ஸ ரூபியான ஸ்ரீஹரி, ஹம்ஸ பட்சியின் வடிவில் அவதரித்தான் என்றுதானே இதன் பொருள்?

ப: இல்லை. ஹம்ஸ என்பது ஸ்ரீஹரியின் புருஷ அவதாரமே ஆகியிருக்கிறது.

கே: ஹம்ஸ என்னும் அவதாரத்தின் உபாஸனை, அனைவருக்கும் கட்டாயம் இல்லைதானே?

ப: உயிரோடிருக்கும் ஒவ்வொரு பிறவியும் ஹம்ஸரூபியான ஸ்ரீஹரியை கட்டாயம் நினைத்தே ஆகவேண்டும். ஏனென்றால் நம் உடலில் வியாபித்திருந்து நம்மை உயிருடன் வைத்திருப்பது, இந்த ஹம்ஸ ரூபியான ஸ்ரீஹரியே ஆவார்.

கே: முக்யபிராணர் நம்முள் இருந்து, ‘ஹம்ஸஸோஹம் ஸ்வாஹா’ என்று ஒரு நாளைக்கு 21600 முறை ஜெபிக்கிறார் என்ற விஷயம் பிரபலமாக இருக்கிறது. இப்படியிருக்கும்போது, ஹம்ஸரூபியான ஸ்ரீஹரியே வியாபித்திருக்கிறார் என்று எப்படி சொல்கிறீர்கள்?

ப: ஹம்ஸரூபியான ஸ்ரீஹரியே நம் மூச்சை இயக்குகிறார். இந்த மூச்சே முக்யபிராணதேவருக்கு ‘ஹம்ஸஸோஹம் ஸ்வாஹா’ என்று ஜெபரூபத்தில் கேட்கிறது. ஹம்ஸரூபியான ஸ்ரீஹரி மற்றும் முக்யபிராணர் இருவரும் நம் மூச்சை இயக்குகின்றனர், மந்திரஜெபத்தை செய்கின்றனர், ‘ஹம்ஸஸோஹம் ஸ்வாஹா’ என்று மிகவும் உற்சாகமாக ஜெபம் செய்கிறார்கள் என்று, உபநிஷத்களில் மிகவும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. மற்றும் ‘ஹம்ஸஸோஹம்’ என்றால், ‘யார் ஹம்ஸனோ, அவனே நான்’ என்று கூறுவதற்கு ஹம்ஸரூபியான ஸ்ரீஹரிக்கு மட்டுமே சாத்தியம். 

கே: எதை / யாரை நினைத்துக்கொண்டு, முக்யபிராணர் ஹம்ஸ மந்திரத்தை ஜெபித்து வருகிறார்?

ப: ஹம்ஸ: = ‘துக்கம் சர்வம் ஹந்தீத ஹம்ஸ:’. அனைத்து துக்கங்களையும் நாசப்படுத்துபவன் ஆகையால் ஸ்ரீஹரிக்கு ஹம்ஸ என்று பெயர். ஸோஹம் = ’அந்த ஹம்ஸனின் பிரதிபிம்பனே நான்’ என்று பொருள். ஸ்வாஹா = ‘வணக்கம்’ என்று பொருள். ஆக, அனைத்து துக்கங்களையும் நாசப்படுத்தும் என் பிம்பரூபியான ஸ்ரீஹரிக்கு என் வணக்கங்கள் என்று நினைத்தவாறு ஜெபிக்கிறார். 

கே: சாத்விகரிடத்தில் மட்டும் இப்படியான ஜெபத்தை செய்கிறார் அல்லவா? மற்றும் இந்த ஸ்தூல சரீரத்தில் மட்டும் ஹம்ஸமந்திரத்தை ஜெபிக்கிறார் அல்லவா?

ப: சாத்விக, ராஜஸ, தாமஸ என்று அனைத்து ஜீவராசிகளிடமும் இதே மந்திரத்தை ஜெபிக்கிறார். ஆனால், அவரவர்களின் யோக்கியத்தைக்கு தக்கவாறு ஜெபித்து, அவரவர்களின் சாதனைகளை  நல்லபடியாக முடித்துவைக்கிறார். வெறும் ஸ்தூல சரீரத்தில் மட்டுமல்லாது, அனிருத்தசரீரம், லிங்கசரீரம் மற்றும் ஸ்வரூபசரீரத்திலும்கூட ஹம்ஸமந்திரத்தை ஜெபிக்கிறார் என்று ஹரிகதாம்ருதசாரத்தில், அதன் உரைகளில் தெரிவிக்கின்றனர்.

கே: ஹம்ஸமந்திரத்தைப் பற்றி எங்கே சொல்லப்பட்டிருக்கிறது?

ப: தந்த்ரசார சங்க்ரஹத்தில், மகாபாரத தாத்பர்ய நிர்ணயத்தின் 22வது அத்தியாயத்தில் மற்றும் ஹம்ஸோபநிஷத்தில் இதைப் பற்றிய விவரங்கள் உள்ளன. 

கே: ஹம்ஸோபநிஷத் என்பது ஹம்ஸரூபியான ஸ்ரீஹரியே உபதேசித்திருக்க வேண்டும். இதில் ஹம்ஸ மந்திரத்தைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்?

ப: ஆம். ஹம்ஸரூபியான ஸ்ரீஹரி, சனகாதிகளுக்கு, ஹம்ஸோபநிஷத்தை உபதேசிக்கிறார். ‘அஹோராத்ரயோ ரேகவிம்சதி சஹஸ்ராணி ஷட்ஷதன்யதிகானி பவந்தி’ என்று சொல்கிறார். மற்றும் மகாபாரத தாத்பர்ய நிர்ணயத்தில் ‘மாஸவ்ரதம் ஸார்தஷஷஷ்வாஸ காய்யைரகல்பயத்’ என்று சொல்கிறார்.

கே: மூன்றுவிதமான ஹம்ஸ மந்திரங்கள் யாவை?

ப: ‘ஹம்ஸஸ்ஸோஹம் ஸ்வாஹா’ என்பது ஷடக்‌ஷர மந்திரம். ‘ஓம் ஹம்ஸஸ்ஸோஹம் ஸ்வாஹா’ என்பது சப்தாக்‌ஷர ஹம்ஸமந்திரம். ‘ஓம் ஹ்ரீம் ஹம்ஸஸ்ஸோஹம் ஸ்வாஹா’ என்பது அஷ்டாக்‌ஷர ஹம்ஸமந்திரம். சப்தாக்‌ஷர ஹம்ஸமந்திரம், பிரம்மாதி தேவர்கள் மட்டும் பயன்படுத்துமாறு உள்ளது. அஷ்டாக்‌ஷர மந்திரம் எங்கும் பொதுவாக வழக்கத்தில் இல்லை. ஆனால் இதை ஜெபம் செய்தால் அனைத்து புருஷார்த்தங்களும் கிடைக்கும். 

கே: தந்த்ரசார சங்க்ரஹத்தின்படி நாம் பூஜிக்கும் ஹம்ஸரூபம் எப்படியிருக்கிறது?

ப: 
த்யாயேத் ரவீந்துகரமிந்து சஹஸ்ரலக்‌ஷ காந்திம்
ப்ரியாசஹிதம் ஆஸ்திதமிந்து பிம்பே |
ஷங்காரி தோர்த்வய முதர்கமஹேந்து பிம்பாத்
சஞ்சிச்சமானம் அம்ருதேன ரமாதினாதம் ||

மேற்கைகளில் சூரியன், சந்திரன் இருவர்களையும், கீழ்கைகளில் சங்கு, சக்கரம் இவைகளை தரித்திருப்பவரும், 1000 சந்திரர்களைக் காட்டிலும் ஒளியுள்ளவரும், ஸ்ரீலட்சுமி தேவியுடன் சந்திர மண்டலத்தின் மத்தியில் இருப்பவரும், அமிர்தத்தினால் அபிஷேகம் செய்யப்பட்டுக் கொண்டிருப்பவரும், ரமாதேவிக்கு தலைவனாகவும் ஆன ஸ்ரீஹரியை தியானிக்க வேண்டும். 

கே: சனக முதலானவர்களுக்கு உபதேசம் செய்ய எடுத்த ஹம்ஸ என்னும் அவதாரமே வேறு; ஹம்ஸமந்திரத்தின் மூலம் நாம் பூஜிக்கும் ஹம்ஸரூபமே வேறு அல்லவா?

ப: சனக முதலானவர்களுக்கு ஆத்மயோகத்தை உபதேசித்த ஹம்ஸரூபம் என்பது சன்யாச ரூபம். நாம் மூச்சு விடுவதற்கு ஆதிகாரணமாக இருக்கும் ரூபம் அது. ஹம்ஸமந்திரத்தின் மூலம் நாம் பூஜிப்பது ஸ்ரீலட்சுமியுடன் கூடிய கிரஹஸ்த ரூபம்.

கே: நம் அனைத்து மத்வ மடத்தின் மூல பீடாதிபதி ஹம்ஸரூபியான ஸ்ரீஹரியே என்று அனைவரும் சொல்கின்றனர். ஆனால், ஹம்ஸரூபியான ஸ்ரீஹரி, சன்யாச கோலத்தில் இருக்கிறார் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறதே? இவை வெறும் கற்பனைதானே?

ப: பலர் இந்த கேள்வியை கேட்கின்றனர். ஆனால், பரமஹம்ஸ சன்யாசிகள் அனைவரும் ஹம்ஸரூபியான ஸ்ரீஹரியின் பரம்பரையில் வருகிறார்கள். இதில் சந்தேகமில்லை. மிகத் தெளிவான சம்பிரதாயம் இருப்பதே இதற்கு ஆதாரம். 

கே: ஹம்ஸ சன்யாச ஆசிரமத்தை எப்போது எடுத்தார்? அவர் பின்னர் யாருக்கு சன்யாச ஆசிரமத்தைக் கொடுத்தார்?

ப: ஸ்ரீஹரி எல்லா காலங்களிலும் எல்லா ஆசிரமங்களையும் கொண்டிருக்கிறார். அதனால், சன்யாச ஆசிரமத்தை மட்டும் தனியாக எடுப்பதற்கு அவருக்கு அவசியம் இல்லை. பிரம்மதேவருக்கு அவர் சன்யாச ஆசிரமம் வழங்கி, பின்னர் அவர் மூலமாக பரம்பரை வளர்ந்து வந்துள்ளது.

கே: ஹம்ஸரூபியான ஸ்ரீஹரியே சன்யாசிகள் அனைவருக்கும் மூலரூபி என்று சொல்வதற்கு என்ன காரணம்?

ப: ஸ்ரீஹரியே அனைத்திற்கும் மூலரூபி. அந்த ஸ்ரீஹரியை விட்டு, இந்த உலகத்தில் எந்த தர்ம-கர்மங்களும் நடைபெறுவதற்கு சாத்தியமே இல்லை. எது நடந்தாலும் அதற்கு ஸ்ரீஹரியே விதையாகி இருக்கிறார். இந்த பார்வையில் பார்த்தால், சன்யாச ஆசிரமத்திற்கு அவரே மூலபுருஷர் என்னும் சிந்தனை மிகவும் பொருள் பொதிந்ததாகும். மேலும் ஹம்ஸரூபியான அவரே, அனைத்து சன்யாசிகளுக்கும் மூலகாரணர் என்று சொல்வதற்கு முக்கியமான காரணம் ஆகும். 

கே: அதென்ன முக்கியமான காரணம்? அதை விளக்கமாகக் கூறினால் நம் அஞ்ஞானம் விலகுமல்லவா?

ப: ஸ்ருஷ்டியின் துவக்கத்தில் சனக, சனந்த, சனாதன, சனத்குமார என்னும் நால்வரை பிரம்மன் உருவாக்கினார். இவர்கள் விரக்தி கொண்டு சன்யாசிகள் ஆனார்கள். இப்படி ஸ்ருஷ்டியின் துவக்கத்திலேயே பிறந்து சன்யாசம் பெற்றவர்களுக்கு ஞான உபதேசம் அளித்த பிரம்மதேவருக்கு, ஞான உபதேசம் அளித்தவரே ஹம்ஸரூபியான ஸ்ரீஹரி.

கே: தற்போது இருக்கும் சன்யாசிகள், ஹம்ஸரூபியான ஸ்ரீஹரியின் பரம்பரையில் வந்தவர்கள் என்பதால் இவர்களை பரமஹம்ஸ என்கிறோம் அல்லவா?

ப: தவறு. பரமஹம்ஸ என்பது சன்யாசிகளில் ஒரு வகை. 1. குடீசக 2. பஹோதக 3. ஹம்ஸ 4. பரமஹம்ஸ என்று நான்கு வித சன்யாச தர்மங்கள் உள்ளன. ஒரே வீட்டில் / இடத்தில் பிட்சை பெற்று இருந்துவருபவர்கள் குடீசக எனப்படுவர். குடுமி, பூணூல் இவற்றை தரித்து ஏழு வீடுகளில் பிட்சை பெற்று இருந்துவருபவர்கள் பஹோதக எனப்படுவர். குடுமி, பூணூல் தரித்து, காவி உடுத்தி, தண்டத்தை ஏந்தி இருப்பவர்கள் ஹம்ஸ எனப்படுவர். குடுமி, பூணூல் இவற்றைத் துறந்து, தொடர்ந்து பயணத்தில் இருந்து, தண்டத்தை ஏந்தியிருப்பவர்களை பரமஹம்ஸ எனப்படுவர் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. 

கே: அப்படியென்றால், பீடாதிபதிகளை மட்டும் பரமஹம்ஸ என்று அழைப்பது தவறு என்று ஆகிறதல்லவா?

ப: ஆம். குடுமி, பூணூல் இல்லாமல், காவி உடுத்தி, ஹரிபக்தியுடன், தண்டத்தை ஏந்தி, எப்போதும் பயணத்தில் இருப்பவரே பரமஹம்ஸ சன்யாசி எனப்படுவர். அதுமட்டுமல்லாமல், நிஜமான சன்யாச தர்மத்தில் இருக்கும் ஒவ்வொரு சன்யாசிக்கும்கூட, ஹம்ஸரூபியான ஸ்ரீஹரியே மூலபுருஷனாக இருக்கிறார். இதற்கு பீடாதிபதியாக இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. 

கே: ஹம்ஸரூபியான ஸ்ரீஹரி, சனகாதிகளுக்கு எந்த ஆத்மயோகத்தை உபதேசித்தாரோ, அதை பின்பற்றும் பரம்பரை நம்மிடையே இல்லை என்பது சரிதானே?

ப: சன்யாசிகளுக்கு இருக்கவேண்டிய மிகவும் முக்கியமான தர்மமே ஆத்மயோகம். அதை ஹம்ஸரூபியான ஸ்ரீஹரி, சனகாதிகளுக்கு மிகவும் தெளிவாக உபதேசித்தார். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஹம்ஸகுஹ்ய மந்திரத்தை தட்சபிரஜாபதி ஆனவர், விந்தியமலையில் ஜெபித்து, அங்கு ஸ்ரீஹரியின் தரிசனத்தைப் பெற்றார் என்று ஆறாம் ஸ்கந்தத்தில், ஹம்ஸகுஹ்ய மந்திரத்தின் மகிமையை சொல்லும்போது விவரிக்கப்பட்டிருக்கிறது. ’பரசித்த வ்ருத்தேர ப்ரத்யக்‌ஷட்வாத்’ என்பதாக மற்றவர்கள் செய்யும் உபாசனைகள் நமக்குத் தெரிவதில்லை. தகுதிபெற்ற பரமஹம்ஸர்கள் தங்களுக்குக் கிடைத்த குரு உபதேசத்தின்படி உபாசனை செய்துவருகிறார்கள். 

கே: அப்படியென்றால் யதி பரம்பரை எப்படி துவங்கியது?

ப: 
வம்ஷஸ்யாதீன் சனகாதீனுபாஸ்யே
துர்வாஸஸம் பரதீர்த்தாக்ய பிக்‌ஷும் |
ஸத்யப்ரக்ஞாம் ப்ராக்ஞதீர்த்தம் முனீந்த்ரம்
பஷ்சாத் பிஷ்யா வச்யுதப்ரேக்‌ஷ மத்வௌ ||

சனகாதி முனிகள், துர்வாசர், பரதீர்த்தரு, ப்ராக்ஞதீர்த்தரு, அச்யுதப்ரேக்‌ஷரு, மத்வர் இவர்கள் மூலபுருஷர்கள். இவர்கள் அனைவருக்கும் ஹம்ஸரூபியான ஸ்ரீஹரியே உபதேசம் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் சனகாதி முனிகள், துர்வாசருக்கு சன்யாச ஆசிரமத்தை அளித்தனர் என்பதாக எங்கும் எழுத்தில் இல்லையென்றாலும் இவர்கள் இருவரும் துவக்கக்கால சன்யாசிகள் என்று தெரிந்துகொள்ளலாம். மேலும், சிரஞ்சீவிகளாக இருப்பதால், சனகாதிகள், துர்வாசர் இன்னும் சன்யாசிகளாக இருக்கின்றனர். அதே தர்மத்தைப் பின்பற்றி பரதீர்த்தர் முதலான பரம்பரை வளர்ந்து வந்துள்ளது. 

கே: ஹம்ஸரூபியான ஸ்ரீஹரி, சனகாதிகளுக்கு ஹம்ஸபட்சி ரூபத்தில் தரிசனம் அளித்தாரா?

ப: மேலே சொன்னதைப் போல, ஸ்ரீஹரி புருஷரூபியாகவே தரிசனம் அளிக்கிறானே தவிர ஹம்ஸபட்சி ரூபத்தில் தரிசனம் அளிக்கவில்லை. 

கே: சனகாதிகளுக்கு ஹம்ஸரூபத்தில் ஸ்ரீஹரி உபதேசித்தாரா?

ப: ஒரு முறை, த்ருடபக்தியைப் பற்றி கேள்விகள் கேட்பதற்கு சனகாதிகள், பிரம்மனிடம் சென்றனர். பின்வருமாறு கேள்வியைக் கேட்டனர்.

குணேஷ்வாவிஷதே சேதோ குணாஷ்சேதஸி ச ப்ரபோ |
கதமன்யோன்ய ஸந்த்யாகோ முமுக்‌ஷோ: ஸந்திதிர்ஷத: ||

மனது உலக / சம்சார விஷயங்களிலும், உலக / சம்சார விஷயங்கள் நம் மனதினிலும் அலைபாய்கின்றன. முமுக்‌ஷு (மோட்சத்தை விரும்பக்கூடியவன்) இவ்விரண்டிலிருந்தும் எப்படி தன்னை விடுதலை செய்துகொள்கிறான்? என்று நிஜமான சன்யாசதர்மத்தைப் பற்றி கேள்வி கேட்டனர். 

கே: இந்தக் கேள்விகளுக்கு, பிரம்மதேவரே சன்யாச தர்மத்தைப் பற்றி உபதேசித்தார் அல்லவா?

ப: இல்லை. அனைத்தையும் அவர் அறிந்திருந்தாலும், அவர் மௌனமாக இருந்துவிடுகிறார். அந்த கேள்விகளையே அசைபோட்டவாறு, ஸ்ரீஹரியை வணங்குகிறார். 

கே: அப்போது ஹம்ஸரூபியான ஸ்ரீஹரி அங்கு தோன்றி பிரம்மதேவருக்கு உபதேசித்தார் அல்லவா?

ப: ஆம். அந்த சமயத்தில் ஹம்ஸரூபியான ஸ்ரீஹரி அங்கே தோன்றுகிறார். பிரம்மதேவர் மிகுந்த பக்தியுடன் சாஷ்டாங்கமாக அவரை வணங்கி, சனகாதிகளுக்கு அருளவேண்டுமென்று வேண்டுகிறார்.  

கே: அப்போது சனகாதிகள் ஸ்ரீஹரியான ஹம்ஸனைக் குறித்து எப்படி பேச்சைத் துவக்கினார்கள்?

ப: ‘கோ பவான்?’ நீங்கள் யார்? என்று சனகாதிகள் கேட்டனர். அப்போது ஸ்ரீஹரி, ‘கோ பவான்?’ என்னும் கேள்வியே அர்த்தமில்லாதது. ஏனென்றால், உங்களைவிட உயர்ந்தவரான பிரம்மதேவரே என்னை வணங்கியிருக்கும்போது, அவரைவிட நான் உயர்ந்தவான இருப்பேன் என்று உங்களுக்கு தெரிந்திருக்கவேண்டும். அதனால் உங்கள் கேள்வியில் பொருளே இல்லை. இப்படியாக அவர்களிடையே பேச்சு துவங்கியது. பிறகு ஹம்ஸரூபியான ஸ்ரீஹரி, சனகாதிகளுக்கு ஆத்மயோகத்தை உபதேசிக்கிறார். நிஜமான சன்யாச தர்மத்தின் மர்மத்தை உபதேசிக்கிறார். பகவத் தத்வத்தின் அறிமுகத்தை செய்விக்கிறார். கர்வம், கோபம் ஆகியவற்றைத் துறந்து, ஒழுக்கத்துடன் இருப்பவனே நிஜமான சன்யாசி என்ற விஷயத்தை தெரிவிக்கிறார். இப்படி ஹம்ஸரூபியான ஸ்ரீஹரி மிகவும் அற்புதமாக சன்யாச தர்மத்தின் உபதேசத்தை செய்கிறார். 

கே: பிறகு என்ன ஆயிற்று?

ப: சனகாதிகளுக்கு ஆத்மயோகத்தை உபதேசித்தபிறகு, சனகாதிகளுக்கு இருந்த சந்தேகங்கள் அனைத்தும் தீர்ந்தன. அவர்கள் அந்த ஹம்ஸரூபியான ஸ்ரீஹரியை பூஜித்தனர். இந்த பூஜையால் மகிழ்ந்த ஸ்ரீஹரி, அவர்களுக்கு அருளி, பிறகு அங்கிருந்து மறைந்து தன் இருப்பிடத்திற்குத் திரும்பினார்.

கே: ஹம்ஸாவதாரத்தின் கதையை சொல்லுங்கள்.

ப: ஸ்ருஷ்டியின் துவக்கத்தில் சனக, சனந்த, சனாதன, சனத்குமார என்னும் நால்வரை பிரம்மன் உருவாக்கினார். இவர்கள் விரக்தி கொண்டு சன்யாசிகள் ஆனார்கள். இப்படி ஸ்ருஷ்டியின் துவக்கத்திலேயே பிறந்தவர்கள் சன்யாசிகள். பின்னர் ருத்ராதிகள் பிறந்தனர். 

சன்யாசிகளான சனகாதிகள், ஒருமுறை சன்யாச தர்மத்தைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக சதுர்முக பிரம்மனிடம் சென்றனர். தமக்கு சன்யாச தர்மத்தைப் பற்றியும், ஆத்மயோகத்தை உபதேசிக்கவும் வேண்டினர். இவர்களின் கேள்விகளுக்கு மிகவும் தெளிவான பதில்களைக் கூறவேண்டும் என்பதற்காக, பிரம்மதேவர் தானே எதையும் உபதேசிக்கவில்லை. நீயே கதி என்று ஸ்ரீஹரியிடம் சரணடைந்தார். அவருக்கு ஸ்ரீஹரி தரிசனம் அளித்தார். இதுவே ஹம்ஸ அவதாரம். எவ்வித களங்கமும் இல்லாத தத்வஞானத்தை உபதேசிப்பதற்குத் தோன்றியதால், இந்த அவதாரத்திற்கு ஹம்ஸ என்னும் பெயர் வந்தது. 

இதற்கு முன் என்றும் கண்டிராத ரூபத்தினைக் கண்ட சனகாதிகள், ஸ்ரீஹரியைப் பார்த்து, ‘கோ பவான்’? - நீங்கள் யார் என்று கேட்டனர். அப்போது ஸ்ரீஹரி, ‘கோ பவான்?’ என்னும் கேள்வியே அர்த்தமில்லாதது. ஏனென்றால், உங்களைவிட உயர்ந்தவரான பிரம்மதேவரே என்னை வணங்கியிருக்கும்போது, அவரைவிட நான் உயர்ந்தவான இருப்பேன் என்று உங்களுக்கு தெரியவில்லையா?. அதனால் உங்கள் கேள்வியில் பொருளே இல்லை. இப்படியாக அவர்களிடையே பேச்சு துவங்கியது. அப்போது சனகாதிகள் சாஷ்டாங்கமாக அவரை வணங்கி, தமக்கு ஆத்மயோகத்தை உபதேசிக்க வேண்டுமென்று வேண்டினர். சதுர்முக பிரம்மனை முன்வைத்துக் கொண்டு, ஹம்ஸரூபியான ஸ்ரீஹரி, சனகாதிகளுக்கு ஆத்மயோகத்தை உபதேசிக்கிறார்.

ஸ்ரீஹரி உபதேசித்த ஆத்மயோகத்தின் சாரத்தை, பாகவத பதினோறாம் ஸ்கந்தம் நமக்கு தெரிவிக்கிறது. இப்படி மிகவும் சிறந்த ஆத்மயோகத்தை உபதேசித்த ஹம்ஸரூபியான ஸ்ரீஹரியே, நமக்கு என்றைக்கும் குருவாக இருக்கிறார். மிகவும் சிறந்தவனரான, சன்யாசிகளுக்கும் குரு எனப்படுபவரான, ஹம்ஸனுக்கு நாம் என்றைக்கும் சரணடைவோமாக. 

கே: ஹம்ஸ என்றால் என்ன பொருள்?

ப: ஹம்ஸ என்றால் யதி என்று நானார்த்தகோஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அனாதி காலத்திலிருந்து, சர்வதந்த்ர ஸ்வதந்திரனாகி, அனைத்து இந்திரியங்களையும் தன் வசம் வைத்துக்கொண்டிருப்பவனே நிஜமான யதி. அவனே ஹம்ஸ. அப்படிப்பட்டவர் ஸ்ரீஹரி மட்டுமே தவிர, வேறுயாரும் இல்லை. இரண்டாம் யதி யார் என்றால், ஸ்ரீஹரிக்கு கட்டுப்பட்டு, அனைத்து இந்திரியங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருக்கும், பிரம்மன் மற்றும் முக்யபிராணர் ஆகியோர். இவர்களும் யதிகளாக இருந்ததால், ஹம்ஸ என்று அழைக்கப்பட்டனர். பிறகு சனகாதி முனிவர்கள் அனைவரும் ஹம்ஸ என்று அழைக்கப்பட்டனர். இப்படி இந்திரிய நிக்ரஹம் செய்த யதிகளுக்கு மட்டும் ஹம்ஸ என்னும் பெயர் பொருத்தமாக இருக்கிறது. இந்திரிய நிக்ரஹம் இல்லாத சில சன்யாசி வேடத்திற்கு யதி என்னும் பெயரோ, ஹம்ஸ என்னும் பெயரோ பொருத்தமாக இருப்பதில்லை. 

தயித: ஸதாம்ருஷப ஏஷ பூதயோ 
வபுருத்வஹன் பரமஹம்ஸ லக்‌ஷணம் |
வைஹரத்வலக்‌ஷ தமபக்‌ஷஷோபனம் 
புரதத்வலிப்ஸு ஸனகாதி வந்தித: ||

அதிசுத்தமான சித்தாந்தத்தை உபதேசிக்க, நாராயணன் சன்யாச சரீரத்தை எடுத்தார். சனகாதி ரிஷிகளுக்கு பரதத்வத்தை உபதேசித்தார். இவரே ஹம்ஸ என்று பெயர் பெற்றார். 

இப்படியாக நாராயண பண்டிதாசார்யர், மத்வவிஜயத்தில் வர்ணிக்கிறார். தத்வஞானத்தை உபதேசிப்பதற்காக ஸ்ரீஹரி ஹம்ஸனாக அவதரித்தார். இதிலிருந்தே யதி பரம்பரை வளர்ந்தது. அதனால், தத்வஞானத்திற்கு ஜிதேந்திரியத்வம் (இந்திரிய நிக்ரஹம்) மிகவும் அவசியமான ஒன்று என்று இதிலிருந்து தெரியவருகிறது. இந்திரிய நிக்ரஹம் இல்லாத தத்வஞானமானது, பாலில் ஒரு துளி விஷம் கலந்ததுபோல் வீணானது.

கே: தந்த்ரசார சங்க்ரஹத்தின்படி ஹம்ஸனை எப்படி தியானிக்கவேண்டும்?

ப: 
த்யாயேத் ரவீந்துகரமிந்து சஹஸ்ரலக்‌ஷ காந்திம்
ப்ரியாசஹிதம் ஆஸ்திதமிந்து பிம்பே |
ஷங்காரி தோர்த்வய முதர்கமஹேந்து பிம்பாத்
சஞ்சிச்சமானம் அம்ருதேன ரமாதினாதம் ||

மேற்கைகளில் சூரியன், சந்திரன் இருவர்களையும், கீழ்கைகளில் சங்கு, சக்கரம் இவைகளை தரித்திருப்பவரும், 1000 சந்திரர்களைக் காட்டிலும் ஒளியுள்ளவரும், ஸ்ரீலட்சுமி தேவியுடன் சந்திர மண்டலத்தின் மத்தியில் இருப்பவரும், அமிர்தத்தினால் அபிஷேகம் செய்யப்பட்டுக் கொண்டிருப்பவரும், ரமாதேவிக்கு தலைவனாகவும் ஆன ஸ்ரீஹரியை தியானிக்க வேண்டும். 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***




No comments:

Post a Comment