Sunday, February 18, 2018

38/40 ப்ருது அம்ச-அவதாரம்

38/40 ப்ருது அம்ச-அவதாரம்

ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்

ப்ருது = Pruthu



கேள்வி: ப்ருது அவதாரத்தின் கதையை சொல்லவும்.

பதில்: அதர்மத்தின் மொத்த உருவமாக வேனன் என்னும் ராஜா இருந்தான். தவறான செய்கைகளால் தன் அரசையே அழித்துக் கொண்டவன். நாஸ்திக சிந்தனையை தன் நாட்டு மக்களிடம் விதைத்தவன். வேனனின் இத்தகைய கொடுஞ்செயல்களைக் கண்ட ரிஷிமுனிகள் மிகவும் கோபம் கொண்டனர். ப்ருகுமுனிகள் தன் ஹுங்காரத்தினாலேயே வேனனைக் கொன்றார். 

வேனனின் தாய் சுநீதி. அவள் சாத்வீகளாக இருந்தாலும், வேனனின் உயிரற்ற உடல் அழியாதவாறு அதை மந்திர-கோஷங்களினால் பாதுகாத்து வந்தாள். ராஜா இல்லாத நாடு இன்னும் சீரழியத் தொடங்கியது. அங்கராஜனின் வம்சமே நின்றுவிடும் நிலைமை வந்துவிடுமோ என்ற கவலை அனைவருக்கும் வந்தது. ரிஷிமுனிகள் அனைவரும் ஓரிடத்தில் சேர்ந்து இதைப்பற்றி ஆலோசித்தனர். வேனனின் உயிரற்ற உடலிலிருந்து அவனின் சந்ததியைப் பெறலாம் என்று முடிவெடுத்தனர்.

பாற்கடலை கடைந்தபோது ஹாலாஹல விஷம் வந்ததைப் போல, வேனனின் தொடையைக் கிழித்தபோது பாபியான நிஷாதன் வந்தான். பின்னர் வேனனின் கைகளைக் கிழித்தபோது சாத்வீகரான ப்ருதுராஜன் மற்றும் அர்ச்சி இருவரும் வந்தார்கள். ப்ருதுராஜன் மூலம் அங்கராஜனின் வம்சம் பின்னர் வளர்ந்து வந்தது. 

ப்ருதுவிடம் ஸ்ரீஹரியும், அர்ச்சியிடம் லட்சுமிதேவியும் அவதரித்தனர். பின்னர் இவர்கள் இருவரும் மணந்து, மொத்த ராஜ்யத்தையும் நெறிப்பட்டு அரசாட்சி செய்தனர். பூமிக்கு ப்ருதிவி என்னும் பெயர் வரும் அளவிற்கு, பற்பல நற்காரியங்களைச் செய்தான். ப்ருதுவிடம் இருக்கும் ஸ்ரீஹரியின் அருள் என்றைக்கும் நமக்கு கிடைக்கட்டும். 

கே: ப்ருது அவதாரம் சொல்லும் செய்தி என்ன?

ப: நிறைய செல்வம் சேர்க்கவேண்டும் என்று நினைப்பவர்கள், அதற்கான சங்கல்பம் செய்துகொண்டு, மூன்று முறை பக்தியுடன் ப்ருது சக்ரவர்த்தியின் சரித்திரத்தை பாராயணம் செய்யவேண்டும். இப்படிச் செய்தால் அவர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பதில் சந்தேகமே இல்லை. 

கே: செல்வங்களை சேர்க்கக்கூடாது என்பதே பாகவதத்தின் முக்கிய செய்தியாகும். ஆனால் இதே பாகவதத்தில், செல்வம் சேர்க்கவேண்டுமென்றால் ப்ருது சக்ரவர்த்தியின் சரித்திரத்தைப் படியுங்கள் என்று சொல்வது தப்பல்லவா?

ப: ஆம். ஸ்ரீஹரியை மறந்துவிட்டு, துக்கத்தைத் தரக்கூடிய செல்வத்தை சேர்த்துக் கொண்டேபோனால், அது தவறுதான். இதில் சந்தேகமேயில்லை. செல்வம் மட்டுமல்ல, அழியக்கூடிய எந்தவொரு செல்வத்தின் மேலும் ஆசைப்படக்கூடாது.

கே: இது எப்படி சாத்தியம்? எந்தவொரு செல்வமும் இல்லாமல் வாழ்வது எப்படி?

ப: எவ்வளவு தேவையோ அவ்வளவு செல்வத்தை சம்பாதிப்பதில் தவறு இல்லை. தேவைக்கும் அதிகமான செல்வத்தை சேர்ப்பது தவறு என்பது பாகவதம் முதலான கிரந்தங்களின் அபிப்பிராயம். 

கே: ஆனாலும், ஸ்ரீஹரியிடம் எதையும் வேண்டாத - சுயநலமில்லாத பக்தியையே செய்யவேண்டும். அழியக்கூடிய செல்வங்களை கேட்பது தவறுதானே?

ப: ஸ்ரீஹரியிடம் வேண்டுவதை விட்டு, யார்யாரிடமோ யாசகம் வேண்டி, அவர்களின் உதவிக்காக கெஞ்சி, அதன்மூலம் செல்வம் சம்பாதிப்பதைவிட, ஸ்ரீஹரியிடம் வேண்டுவது மிகவும் உத்தமமான செயலாகும். அதனாலேயே தாசர்கள் அனைவரும் ‘பேடிதரே என்னொடெயன பேடுவே’ (வேண்டினால் என் தலைவனிடம் (ஸ்ரீஹரியிடம்) மட்டுமே வேண்டுவேன்) என்று பாடினர். 

கே: அப்படியென்றால் ஸ்ரீஹரியிடம் பணம் வேண்டும் என்று வேண்டலாமா? 

ப: சந்தேகமே வேண்டாம். உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ, அதை ஸ்ரீஹரியிடமே நேரடியாகக் கேளுங்கள். அவரைத் தவிர வேறு யாரிடமும் எதையும் கேட்பது வேண்டாம். ஆகையால், உங்களுக்கு பெரிய செல்வந்தர் ஆகவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், ப்ருது சக்ரவர்த்தியின் சரித்திரத்தைப் படிக்கலாம். அதில் தவறில்லை. சம்பாதித்த செல்வத்தை ‘விஷ்ணு ப்ரேரணயா, விஷ்ணு ப்ரீத்யர்த்தம்’ என்று மட்டுமே செலவு செய்யவும். 

கே: நம் தேவைக்கேற்ப செல்வத்தை சேர்ப்பது தவறு என்றான பிறகு, கோடீஸ்வரன் ஆகவேண்டும் என்று ப்ருது சக்ரவர்த்தியின் சரித்திரத்தை பாராயணம் செய்வதும் தவறுதானே?

ப: அப்படியில்லை. சாத்விகமான நோக்கம் இருந்தால் மிகுந்த செல்வத்தை சம்பாதிப்பது தவறில்லை. செல்வம் வந்தபோது கர்வம் கொள்ளாமல் மற்றும் அந்த செல்வத்தினால் மற்றவர்களுக்கு பயன் இருந்தால், அப்படி வேண்டிக்கொள்வதில் தவறில்லை. தர்ம, அர்த்த, காம, மோட்ச ஆகியவைகளில், அர்த்த கூட ஒரு புருஷார்த்தம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. தர்மஸ்தாபனைக்காக, மிகப்பெரிய அளவில் ‘அர்த்த’த்தின் அவசியம் இருக்கிறது. அதற்காக ப்ருதுசக்ரவர்த்தியின் கதையைப் படித்து, அனைத்துவித செல்வங்களையும் பெற்று பாக்யசாலிகள் ஆகுங்கள்.

கே: இவ்வளவு செல்வங்களை நமக்குக் கொடுக்கவேண்டுமெனில், அந்த ப்ருதுராஜன் யார்? அவனின் சிறப்பு என்ன?

ப: வேனனின் உடலிலிருந்து பிறந்த ப்ருது என்னும் சக்ரவர்த்தியிடம், ஸ்ரீஹரி, ப்ருது என்னும் பெயரிலேயே நிறைந்திருக்கிறார். இது ஸ்ரீஹரியின் ஆவேச-அவதாரம். இவரின் கைகளில் சங்கு சக்கரம் ஆகிய சின்னங்களை ஏந்தியிருக்கிறார். ஸ்ரீஹரி சுதர்சன சக்கரத்தை ஏந்திருப்பதைப் போல, இவரும் சுதர்சன சக்கரம், கௌமோதகி என்ற கதை ஆகிய ஆயுதங்களை தரித்திருக்கிறார். ஆகையால், ஸ்ரீஹரியின் விசேஷமான ஆவேசம் உள்ள மிகப்பெரிய சக்ரவர்த்தி இவர்.

கே: ப்ருது ராஜன் மூலமாகவே பூமிக்கு ப்ருதிவி என்று பெயர் வந்ததென்று கேள்விப்படுகிறோம். இதன் காரணம் என்ன?

ப: வறட்சியினால் தன் நாட்டு மக்கள் துன்பப்படும்போது, கோபமடைந்த ப்ருதுராஜன், ப்ருதுதேவதையாக மாறி, பூமிதேவியை கொல்வதற்காக அவள் மேல் அம்பு தொடுத்தான். பூமிதேவி, ஒரு பசு ரூபத்தை எடுத்து அந்த அம்பிலிருந்து தப்புவதற்காக ஓடத் துவங்கினாள். ப்ருதுவும் அவளை விடாமல் துரத்த, எங்கும் ஒளிவதற்கு இடமில்லாமல், பூதேவி, ப்ருதுவிடமிருந்த ஸ்ரீஹரியையே சரணடைந்தாள். அப்போது ப்ருது, ஸ்வாயம்புபமனுவை கன்றுக்குட்டியாக மாற்றி, எல்லா செல்வங்களையும், அந்த பசுவிடமிருந்து பால் மூலமாகக் கறந்து தன் மக்களுக்கு வழங்கினான். தேவர்கள், ரிஷிகள் ஆகிய அனைவரும் தங்களில் முக்கியமானவரை ஒரு கன்றுக்குட்டியாக மாற்றி, தமக்கு வேண்டியவற்றை பாலின் ரூபத்தில் பெற்றுக்கொண்டனர். பிறகு ப்ருது தன் அம்பு மூலமாகவே முன்பு ஏற்பட்ட பள்ளத்தை அடைத்தான். மக்கள் வசிப்பதற்காக ஊர், நகரம், புரம் இவற்றை அமைத்தான். இதனாலேயே, இந்த பூமிக்கு ப்ருதிவி என்னும் மிகப் பொருத்தமான பெயர் வந்து, பின் வழக்கத்திலும் புகழடைந்தது. 

கே: தன்னில் ஸ்ரீஹரியால் நிறைந்திருக்கிற ப்ருதுராஜன், மொத்த பூமண்டலத்தையே தனது அரசாட்சிக்குக் கீழ் கொண்டு வந்தான். ஸ்வர்க்க லோகத்தை ஏன் தனது அரசாட்சிக்குக் கீழ் கொண்டு வரவில்லை?

ப: 100 அஸ்வமேத யாகங்களைச் செய்யவேண்டுமென்று சொல்லி, அதில் 99 யாகங்களை செய்து முடித்தான். 100வது அஸ்வதேத்தின் குதிரையை, இந்திரன் திரும்பத்திரும்ப அபகரித்தபோது, பிரம்மதேவரின் கட்டளையின்பேரில் ப்ருது யாகத்தை நிறுத்தினான். ஸ்வர்க்க லோகத்தை தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரும் நோக்கம், ப்ருதுவுக்கு இருக்கவில்லை. ஸ்ரீஹரியின் கட்டளைப்படி, இந்திரனிடம் நட்பு கொண்டு, தன் தியாக உணர்வை வெளிப்படுத்தினான். 

கே: ப்ருதுராஜன் யாரிடமிருந்து உபதேசத்தைப் பெற்றான்?

ப: மோட்சத்தின் பாதையைப் பற்றி சனத்குமாரரிடம் உபதேசம் பெற்றான். ஸ்ரீஹரியிடம் பக்தி, பொருட்களில் விரக்தி - இவ்விரண்டுமே மோட்சத்திற்கான பாதைகள் என்று அறிந்தான். ஹரிபக்தியை ஒரு படகாக மாற்றி, சம்சார சாகரத்தை அதிக சிரமமில்லாமல் ஒரு விளையாட்டாக கடந்தான். 

கே: ப்ருதுராஜனிடம், ஸ்ரீஹரியின் ராஜராஜேஸ்வர என்னும் ரூபத்தின் ஆவேசம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். சிலர் ப்ருது ரூபத்தின் ஆவேசம் என்கிறார்கள். எது சரி?

ப: இரண்டுமே சரியானவை ஆகும். ஸ்ரீஹரி ராஜராஜேஸ்வர ரூபத்தில், அனைத்து சக்ரவர்த்தி மற்றும் ராஜர்களிடம் நிறைந்திருக்கிறார். ப்ருதுவிடம் மட்டும் ப்ருது ரூபத்திலும் நிறைந்திருக்கிறார். ஒருவேளை, ராஜராஜேஸ்வர என்பதே ஆவேச அவதாரம் என்று நினைத்தால், அனைத்து சக்ரவர்த்திகளிடம் இது சாதாரணமாகவே காணப்படுவதால், ப்ருதுராஜன் ஸ்ரீஹரியின் ஆவேச-அவதாரம் என்பது சரியல்ல என்றாகிவிடுகிறது. ஆகையால், ப்ருதுவிடம் மட்டும் ப்ருது நாமகனாக ஸ்ரீஹரி நிறைந்திருக்கிறான் என்று தெரிந்துகொள்ள வேண்டும். 

கே: ப்ருது என்பது ஸ்ரீஹரியின் அவதாரம் என்பதற்கு என்ன ஆதாரம்?

ப: 
‘அதாப்யுதாரஸ்ரவஸ: ப்ருதோர்ஹரே: கலாவதாரஸ்ய கதாம்ருதாத்ருதா:’ - என்று ஸ்ரீஹரியின் அவதாரமே ப்ருது என்று பாகவதம் மிகத் தெளிவாகக் கூறுகிறது. மேலும், ‘ஏஷ ஸாக்‌ஷாத்தரேரம்ஷோ ஜாதோ லோகரிரக்‌ஷயா’ என்றும் பாகவதம் சொல்கிறது. 

ஸ்ரீமதாசார்யரும் பாகவத தாத்பர்யத்தில், ‘ப்ருது ஹைஹயாதிஷு ஜீவேஷ்வாவிஷ்டோ ஹரி: ஸ்வயம்’, ப்ருது, கார்த்தவீர்யார்ஜுனன் ஆகியோர் ஸ்ரீஹரியின் ஆவேச-அவதாரங்களே என்று தெரிவிக்கிறார். 

கே: துஷ்டனான வேனனிடமிருந்து சாத்விகனான ப்ருது மட்டும் எப்படி பிறந்தான்?

ப: வேனனின் உடலில், சாத்வீக, ராஜஸ, தாமஸ என்னும் மூன்று குணங்களும் இருந்தன. முதலில் ராஜஸ மற்றும் தாமஸ பாகங்களிலிருந்து நிஷாதன் என்னும் பாபாபிமானி பிறந்தான். பின்னர், சாத்விக பாகத்திலிருந்து ப்ருதுராஜன் பிறந்தான். இவனுடன் அர்ச்சி என்பவளும் ஸ்ரீலட்சுமியின் ஆவேசத்துடன் பிறந்தாள்.

கே: அர்ச்சி என்பவள் யார்?

ப: ஸ்ரீஹரியின் அம்சாவதாரமாக ப்ருது பிறந்தான். லட்சுமியின் அம்சாவதாரமாக அர்ச்சி பிறந்தாள். இவர்கள் இருவரும் மணம் புரிந்து, நல்லாட்சியைத் தந்தனர்.

கே: ஸ்ரீஹரியின் ஆவேசாவதாரத்திற்கு லட்சுமி காரணம் ஆவது எப்படி சாத்தியம்?

ப: ஸ்ரீஹரியின் ஆவேச அவதாரத்திற்கு லட்சுமியின் ஸ்வரூப அவதாரம்கூட காரணம் ஆவதில்லை. ஸ்ரீஹரி, லட்சுமி இருவருடையதும் ஆவேசாவதாரம் ஆன காரணத்தால், ஆவேசம் கொண்ட ஸ்ரீஹரிலட்சுமிக்கு மட்டுமே சங்கமம் சாத்தியம். ப்ருது-அர்ச்சி இருவரும் ஹரி-லட்சுமி இவர்களின் பக்தர்கள் அவ்வளவே. தத்வநிர்ணய என்னும் கிரந்தத்தில் இதைப்பற்றி சொல்லியிருப்பதாக, ஸ்ரீமதாசார்யர் நிர்ணயத்தில் சொல்லியிருக்கிறார். 

கே: ப்ருது அவதாரம் சொல்லும் செய்தி என்ன?

ப: ’ஸ்ரீஹரியே சர்வோத்தமன். அவனிடம் மட்டுமே பக்தி செய்யவேண்டும். பிரம்மஞானிகளிடம் அவர்களின் தாரதம்யத்தைப் பொறுத்து மரியாதை தரவேண்டும். சனாதன தர்மத்தை கடைபிடிக்க வேண்டும். இதற்காகவே நான் வாழவேண்டும்.’

இந்த தத்வத்திற்கேற்ப வாழ்ந்து நிரூபித்துக் காடியவர் ப்ருது சக்ரவர்த்தி. தன் தந்தைக்கு எதிராக, தன் தந்தையின் அதார்மிக பேச்சுகள் அனைத்தையும் மறுத்து, மக்களுக்கு வாழ்க்கைத் தத்வத்தை உபதேசித்தான். ஸ்ரீஹரியின் சனாதன தர்மத்திற்கு நம் முன்னோர்கள் யாரும் துரோகம் செய்திருந்தார்களேயானால், அவர்களின் பேச்சை மற்றும் அவர்களின் அதார்மிக செயல்களை நாமும் செய்யக்கூடாது. அத்தகையவர்களின் விருப்பத்திற்கு எதிராக நடந்தாலும், நீங்கள் பாவ கர்மங்கள் செய்யாதவர்களாக இருப்பீர்கள். மாறாக உங்கள் மூலமாகவே அவர்களும் நற்கதியை அடைவார்கள். ‘அஹம் ப்ரம்மேதி வேனஸ்து த்யாயன்னாபாதரந்தம:’ - இதி ஸ்ரீமதாசார்ய:’ (இது ஸ்ரீமதாசார்யரின் வாக்கியம்).

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

***


No comments:

Post a Comment