21/40 ரிஷப அவதாரம்
ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள்
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: பெம்மத்தி வெங்கடேஷாச்சார்
தமிழில்: 'ஜகன்னாத கேசவ’ T.V.சத்ய நாராயணன்
கே: ரிஷப என்னும் அவதாரத்தைப் பற்றி எங்கும் சொல்லப்படவில்லை. சுளாதிகளிலும் இல்லை. ஆகவே இதைப் பற்றிய சிந்தனை அநாவசியம்தானே?
ப: பாகவத, பிரமாண்ட புராணங்களில் இந்த அவதாரத்தைப் பற்றிய அபூர்வமான விஷயங்கள் உள்ளன. விஜயதாசர் இயற்றியுள்ள ரிஷபாவதார சுளாதியும் கிடைக்கிறது. தெரிந்து கொள்வதற்கும், பூஜை செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது. ஸ்ரீஹரியின் ரூபம், அவதாரம், செயல்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வதற்கு தடை ஒன்றுமில்லை. பிரதிமை (உருவச்சிலை) பூஜை, ஜபம், ஹோமம் ஆகியவற்றைச் செய்வதற்கு குருகளின் அனுமதி தேவை.
கே: ரிஷப அவதாரத்தில் என்ன இருக்கிறது?
ப: ரிஷப அவதாரம் அற்புதமானது. மிகவும் அற்புதமானது. இதை வர்ணிப்பதற்கு சொற்கள் போதாது.
கே: அது என்ன அவ்வளவு அற்புதம்?
ப: நம் நாட்டிற்கு பாரதம் என்ற பெயர் வந்ததே இந்த ரிஷபனின் மகனான பரதன் மூலமாகதான். மேலும் ரிஷபன் தன்னுடைய சாதனைக்கு தேர்ந்தெடுத்த இடம், தெற்கு கர்நாடகத்தின் குடிசாத்ரி.
கே: நம் நாட்டின் பெயர் இந்தியா அல்லவா?
ப: சிந்து தேசத்தினர் ஹிந்துவாகினர். பிரிட்டிஷ் அரசு, ஹிந்துதேசத்தை இந்தியா என்று தவறாகப் பெயரிட்டுவிட்டனர். பின்னர் வந்த நவீன தலைமுறையினர் இதையே நம் நாட்டின் பெயராகக் கொண்டுவிட்டனர்.
கே: துக்ஷகனின் மகனான பரத சக்ரவத்தினாலேயே நம் நாட்டிற்கு பாரதம் என்று பெயர் வந்ததுதானே?
ப: நம் நாட்டிற்கு பாரதம் என்று பெயர் வந்தது, ரிஷப நாமகனான ஸ்ரீஹரியின் மகனான பரதனிடமிருந்தே தவிர, துக்ஷகனின் மகன் மூலமாக அல்ல.
கே: அதற்குமுன் இந்த நாட்டிற்கு என்ன பெயர் இருந்தது?
ப: அஞ்சனாப.
கே: ரிஷபன் தென் கர்நாடகத்திற்கு வந்தான் என்றீர்கள். ஆனால், கர்நாடக மாநிலம், தெலுகு மாநிலம், தமிழ் மாநிலம் ஆகியவை சமீபத்தில் தோன்றியவைதானே?
ப: அப்படி ஒன்றுமில்லை. லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரும்கூட இந்தப் பெயர்கள் பயன்பாட்டில் இருந்தன. பாகவதத்தில் கர்நாடக மாநிலத்தின் பெயர் இப்படியாக இருக்கிறது. ’ஏகதா து காங்கட கர்நாடகாத் தக்ஷிண கர்நாடகான் தேஷான் யத்ருச்சயோபகத: குடசாசலோபவனே அஸ்ய க்ருதாஷ்மகபள உன்மத இவ’. ’ரிஷபதேவனு பீமரதீனதி தீரவெனிஸித காங்கடகர்நாடகதிந்த தக்ஷிண கர்நாடகக்கே தெரளி அல்லி குடசாத்ரியல்லி யௌனபங்கவாக பாரதெந்து பாயியொளகெ கல்லு ஹாகிகொண்டு ஹுச்சனந்தே இத்த’. பொருள்: ரிஷபதேவன், பீமரதி நதிக்கரையில், தக்ஷிண கர்நாடகத்திற்குச் சென்று அங்கு குடசாத்ரி என்னும் இடத்தில் வாயில் கல்லை போட்டுக்கொண்டு பைத்தியம்போல் இருந்தான்’.
கே: அப்படியா? எவ்வளவு அற்புதம்? நம் பாரதம். நம் கர்நாடகம். நம் தென் கர்நாடகம். நம் குடிசாத்ரி - இதுவே நம் பெருமை.
ப: ஆம். இதில் சந்தேகமே இல்லை. இந்தப் பெருமைக்குக் காரணமான ஸ்ரீஹரியை மறக்கக்கூடாது அவ்வளவே.
கே: ரிஷபதேவன் தேவனே அல்ல, இவர் ஒரு தீர்த்தங்கரர் அல்லவா?
ப: ரிஷபன் ஸ்ரீஹரியின் அவதாரமே என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. ஆனால் இவரை தீர்த்தங்கரர் என்று ஜைனர்கள் சொல்லி வருகின்றனர்.
கே: தீர்த்தங்கரர் என்றால் என்ன? தேவன் என்றால் என்ன?
ப: இந்த கேள்விக்கு ஜைனர்களே பதில் சொல்லியிருக்கின்றனர். ஞான நிலையை அடைந்து இன்னும் மேலே முன்னேறுகிறவர்களே தீர்த்தங்கரர் ஆவர். இந்த ரிஷபன் முதலானவர் தீர்த்தங்கரர்களின் வரிசையில் வந்தவர் என்பது ஜைனர்களின் வாதம். ஸ்வந்தந்த்ரனும், ஆதி அந்தம் இல்லாமல் அனைத்து காலங்களிலும் பரிபூர்ணனாகி இருப்பவனே தேவன்.
கே: ஆனால் இன்றும் ஜைனர்கள் இந்து தெய்வங்களையெல்லாம் பூஜிக்கின்றனர். தீபாவளி முதலான பண்டிகைகளையும் கொண்டாடுகின்றனர். இது ஏன்?
ப: சர்வோத்தமனான ஸ்ரீஹரியை ஜைனர்கள் ஒப்புக்கொள்வதில்லை. இந்திரன் முதலான தேவர்கள், ஸ்வர்க்கம் முதலான உலகங்கள், கர்ம, சுகர்ம, குகர்ம ஆகியவை ஜைன சாகியத்யங்களில் பரவலாக காணப்படுகின்றன. மறுஜென்மத்திற்கு காரணமான கர்மத்தினை போகத்தின் மூலம் அல்லது கடினமான தவத்தின் மூலம் தாண்டுவதே, மோட்சத்திற்கு செல்லும் வழி என்பது ஜைனர்களின் சித்தாந்தம். ஆனால் இன்றைய ஜைனர்களிடம் ஹிந்துக்களின் பழக்கவழக்கங்கள் காணப்படுவது மிகவும் ஆச்சரியமான விஷயம். இறுதியாக, தெரிந்துகொள்ள வேண்டியது இதுவே - 24 தீர்த்தங்கரர்களை ஜைனர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அதில் முதலாவது ரிஷபன். இவரே ஜைன மதத்தை நிறுவியவர்.
கே: ரிஷப என்று சொல்லவேண்டுமா அல்லது வ்ருஷப’வா?
ப: ரிஷப என்றே சொல்லவேண்டும். ’ரிஷ ஞானே’ என்பதிலிருந்து வந்த இந்த சொல்லுக்கு பரிபூர்ணம் என்று பொருள். வ்ருஷப என்றாலும் அது தப்பில்லை. வ்ருஷ என்றால் தர்மம் என்று பொருள். ப என்றால் வளர்ப்பவன் என்று பொருள். தர்மத்தில் மூழ்கியிருப்பவர்களை மேல் எழுப்புபவன் ஆகையால் வ்ருஷப என்றும் சொல்லலாம்.
கே: ரிஷப அவதாரத்தின் கதையை விளக்கவும்.
ப: ப்ரியவ்ரத ராஜனின் பேரனான நாபிராஜன் புத்ரகாமேஷ்டி யாகத்தைச் செய்தான். ஸ்ரீஹரியே அவன் மகனாக ரிஷப ரூபத்தில் மேருதேவியிடம் அவதரித்தார். ஞானியான ரிஷபன் உலகத்தை ஆளத் துவங்கினான். ஒரு முறை தேவேந்திரன் ரிஷபனுடனான போட்டியில், மழை பெய்விக்கவில்லை. அப்போது ரிஷபன் தானே மழையை பெய்வித்தார். மக்களின் அபிமானத்தைப் பெற்றார். இந்திரன் தன் மகளான ஜெயந்தியை திருமணம் செய்துகொடுத்தான். இவள் மூலமாக ரிஷபன், பரதன் முதலான 100 வாரிசுகளைப் பெற்றார்.
கண்ணிற்கு இட்டுக்கொள்ளும் மையைப் போல் கருப்பாக அவனது தேகம் இருந்த காரணத்தால், ரிஷபனுக்கு ‘அஞ்சனாப’ என்று பெயர் வந்தது. அவர் ஆளும் தேசத்திற்கும் ‘அஞ்சனாப’ என்ற பெயரே நிலைத்தது. அவனின் மகன் பரதன் ஆண்டபிறகு இந்த தேசத்திற்கு ‘பாரத’ என்ற பெயர் வந்தது. பரதனின் 99 பேர் தம்பியரில், குஷாவர்த முதலான ஒன்பது பேர் முக்கியமானவர்கள். கவி, ஹரி முதலானவர்கள் சிறந்த பக்திமான்களாக விளங்கினர். இவர்கள் கொடுத்த விலைமதிப்பற்ற உபதேசங்கள் பாகவத பதினோறாவது ஸ்கந்தத்தில் ஜாயந்தீய உபாக்யானத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. மீதி 80 பேர்கள், விஸ்வாமித்திரரைப் போல ஸ்ரோத்ரிய (வேதங்களில் சொன்னவற்றை மட்டுமே பின்பற்றும்) பிராமணராக இருப்பது மிகவும் அற்புதமான விஷயம்.ஆனந்தமயமான ரிஷபன், கிருஹஸ்தாஸ்ரமத்தை அனுசரித்து 100 அஸ்வமேத யாகத்தை செய்தார்.
ஒருமுறை ரிஷபன், பல ரிஷிகள், மக்கள் மற்றும் தனது மகன்கள் அனைவருக்கும் இந்த உடலானது நிரந்தரமில்லை என்று உபதேசித்து, பரதனுக்கு முடிசூட்டிவிட்டு, அரசைத் துறந்து அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
மிகவும் அழகனான ரிஷபன், அயோக்கியர்களின் மோகனத்திற்காக கழிவுகளால் அலங்காரம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டார். ஆனாலும் அந்தக் கழிவுகள், சுமார் 10 யோஜனை தூரம் வரை நல்ல சந்தனம் போல் மணம் கொடுத்தன. மனோவேகம், கூடு விட்டு கூடு பாய்தல் ஆகிய யோகசித்திகள் ரிஷபனுக்கு வந்தன. ஆனால் அவற்றை அவர் தனது லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ளவில்லை. பின், தென் கர்நாடகத்தில் குடசாத்ரிக்கு வந்து, பைத்தியத்தைப் போல நடமாடினார்.
யோகிகள் மௌன விரதத்தை முறிக்கக்கூடாது என்பதைக் காட்டுவதற்காக வாயில் கற்களை அடைத்துக்கொண்டு திரிந்தார். காட்டுத்தீயினில் நுழைந்தார். அவரின் ஆவேசத்தினால் காட்டுத்தீ இன்னும் தகதகவென்று பற்றி எரிந்து காட்டினை அழித்தது. சாமான்ய மக்கள், ரிஷபன் காட்டுத்தீயினில் எரிந்து போனார் என்று சொல்லத் துவங்கினர். ஆனால், பிறகு காட்டுத்தீயிலிருந்து வெளியில் வந்து தான் சாட்சாத் வாசுதேவரூபியான பரமாத்மனே என்று சஜ்ஜனர்களுக்குத் தெரிவித்தார். அங்கிருந்த அர்ஹந்தன் என்னும் அரசன், இவரை தவறாகப் புரிந்துகொண்டு, தன்னையே சாட்சாத் தேவன் என்று அறிவித்துக்கொண்டான். வைதிக தர்மத்தை விட்டொழித்து, மதங்களுக்கு எதிரானவர்களின் கொள்கைகளை பரப்பத் துவங்கினான்.
இப்படி ரிஷப ரூபியான ஸ்ரீஹரியின் அவதாரத்தின் கதை மிகவும் சுவாரசியமானது. கேட்பவர்களுக்கும், சொல்பவர்களுக்கும் அதிக பக்தியை உண்டுபண்ணுவதாக இருக்கிறது.
கே: ரிஷபாவதாரத்தின் சிறப்பு என்ன?
ப: தன்னுடைய பல அவதாரங்களில் ஸ்ரீஹரி துஷ்ட க்ஷத்திரியர்களை கொன்றொழித்தது தெரிந்ததே. ஆனால் இந்த அவதாரத்தில், தானே ஒரு க்ஷத்திரியனாக இருந்தாலும், எந்த துஷ்டர்களையும் கொல்லவில்லை. முதலில் கிருஹஸ்தாக இருந்து, பின்னர் ஒரு பைத்தியத்தைப் போல மாறி, அரக்கர்களுக்கு மயக்கத்தைக் கொடுக்கக்கூடிய அற்புதமான சரித்திரத்தைக் கொண்டவர் இவர்.
கே: ரிஷபன் யாரின் மகன்? இவருக்கு எவ்வளவு மக்கள்? இவனின் மனைவி யார்?
ப: இவர் ப்ரியவ்ரத ராஜனின் பேரனான நாபிராஜனின் மகன். தாயின் பெயர் மேரு. இந்திரனின் மகளான ஜெயந்தி, இவரது மனைவி. இவருக்கு 100 பேர் மக்கள். இவர்களில் 81 பேர் தவம் செய்து ஸ்ரோத்ரிய பிராமணரானவர்கள். ஒன்பது பேர் ஹரிபக்தர்கள். மிச்ச பேர் இவருக்கு உதவி செய்பவர்களாக இருந்தனர்.
கே: ரிஷபதேவ யாருக்கு ஞானப் பிரசாரம் செய்தார்?
ப: முதலில் தனது வாரிசுகளுக்கு ஞானோபதேசத்தை செய்தார்.
குருர்ன ஸ ஸ்வைத் ஸ்வஜனோ ந ஸ ஸ்யாத்
பிதா ந ஸ ஸ்யாத் ஜனனி ந ஸா ஸ்யாத் |
தைவம் ந தத் ஸ்யான்ன பதிஷ்ச ஸ
ஸ்யாத் ந மோசயோத் ய: சமுபேதம்ருத்யும் ||
இறப்பிற்கான பரிகாரத்தை உபதேசிக்காத குரு, குருவே அல்ல, உறவினர் உறவினர் அல்ல, தந்தை தந்தையல்ல, தாய் தாயல்ல, தெய்வம் தெய்வம் அல்ல, கணவன் கணவனல்ல. இப்படியாக இவர் செய்த உபதேசம் மிகவும் அற்புதமானது.
கே: ரிஷபதேவன் அரசாட்சியை தியாகம் செய்து, எப்படி பைத்தியத்தைப் போல் திரியத் துவங்கினார்?
ப: தன் மக்களுக்கு உபதேசித்து, பரதனை அரசனாக நியமித்து, தனது அரசாட்சியை தியாகம் செய்து புறப்பட்டார் ரிஷபதேவன். ஆஹவனிய முதலான அக்னிகளை தன்னில் உண்டுபண்ணி, திகம்பரனாக தலை கூந்தலை விரித்துப்போட்டு, கண்-காது குறைபாடு உள்ளவர்களைப் போல், பைத்தியக்காரர்களைப் போல் வேடமணிந்து, மக்கள் அவரிடம் பேச்சு குடுத்தாலும் மௌனவிரதத்தை அனுசரித்து சுற்றிவந்தார்.
கே: அருமை. இந்த சமயத்தில் ரிஷபதேவனின் உடல் எப்படியிருந்தது? அவரை பாகவதம் எப்படி
வர்ணிக்கிறது?
ப: ‘அதிசுகுமாரகர சரணோர:ஸ்தலவிபுளபாஹ்வம்ஸகள வதனாத்யவயவவின்யாஸ: ப்ரக்ருதிஸுந்தர:
ஸ்வபாவஹாஸமுகோனவனளின தளாயமானஷிஷிரதரபார்வருணாய தனயனஸ்த்ருஷ ஸுபக கபோலகர்ணிகம் நாஸோ விகோடஸ்மித வதனமஹோத்ஸவேன புரவனிதானாம் மனஸி குஸுமஷரமுபததான: பராகவலம்ப மானகுடிலகபிஷ கேஷ பூரிபாரோவதூதமலின நிஜசரீரேண க்ருஹகைஹேத இவாத்ருஷ்யத’ ||
ரிஷபதேவன் அழகானவர். அவரது கைகால்கள், மார்பு, நீண்ட தோள்கள், கழுத்து, முகம் அனைத்தும் மிக அழகு. இயற்கையிலேயே சிரித்தவாறு இருக்கும் கண்கள். அப்போதே மலர்ந்த தாமரை மலரைப் போன்ற, சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடிய அழகான கண்கள். அவைகளால் கன்னம், காது, தொண்டை, மூக்கு ஆகியவைகளுக்கு அழகு. அவைகளும்கூட அழகானவைகளே. புன்னகையுடன் கூடிய முகத்தைப் பார்க்கும் கண்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றன. பெண்களின் மனதிற்கு மலர்மாலைகளான அம்புகளைத் தொடுப்பவனாக இருக்கிறார். இத்தகைய மகாஞானியான ரிஷபதேவனின் அருள் என்றென்றும் இருந்து மோகத்தில் விழாதவாறு, தத்வஞானத்தை அளித்து என்னைக் காப்பாற்றட்டும்.
கே: ரிஷபனை என்னவென்று வணங்கவேண்டும்?
ப: ‘நிர்ஜிதாத்ம ரிஷபோ த்வந்த்வாத் பயாத் அவது’. பயம், நஷ்டம், ஜயம், லாபம், ப்ரீதி, மோகம், சுகம், துக்கம், ஞானம், அஞ்ஞானம், பந்தம், மோட்சம் இப்படி அனைத்து த்வந்த்வ கர்மங்களிலும் நாம் சிக்கி உழல்கின்றோம். எப்போதும் சந்தேகத்திலேயே இருக்கின்றோம். யார் எப்போதும் அனைத்திலும் சந்தேகம் கொள்கிறானோ அவன் நாசமடைவான் - ‘சம்ஷயாத்மா வினஸ்யதி’. என்று பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். பயங்கரமான இந்த சந்தேகம் என்னும் முள்ளை எடுத்தெரிவதற்கு ரிஷபரூபியான ஸ்ரீஹரியை வணங்கவேண்டும்.
கே: ரிஷபதேவர் சொல்லும் செய்தி என்ன?
ப: முதலில் இந்த நாட்டிற்கு ‘அஞ்சனாப’ என்ற பெயரே இருந்தது. பின்னர், ரிஷபனின் மகனான பரத சக்ரவர்த்தியினால் ‘பாரத’ என்று பெயர் வந்தது. ஆகவே ஒவ்வொரு பாரத மக்களும், ரிஷபனை நினைக்கவேண்டும். யாரினால் இந்த நாட்டிற்கு பாரதம் என்று பெயர் வந்ததோ, அவரையே மறந்தது நம் அனைவரின் துரதிருஷ்டம்.
ரிஷபரூபியான ஸ்ரீஹரி முதலில் கிருஹஸ்தாஸ்ரமத்தை ஸ்வீகரித்து, பின்னர் அனைத்தையும் நீங்கி, பூரண சன்யாசத்தைப் பெற்று, காட்டிற்குக் கிளம்பினார். இது நம் அனைவருக்குமான ஒரு நல்ல பாடம். நாமும் இந்தப் பிறவியில், சம்சார பாரத்தை விட்டு, ஸ்ரீஹரியின் பாதங்களில் சரணடையவேண்டும்.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து
***
No comments:
Post a Comment