ஸ்லோகம் #34: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ
இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்
தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[ஸ்லோகம் 34]
த்3விஜரு பி4க்ஷெய நீடி3தெ3ல்லவ த்யஜிஸதெ3லெ பு4ஞ்சிஸி மஹாமதி
விஜய படெ3த3ரு ஆருஷாஸ்த்ரக3ளரிதவர கெ3லிது3 |
நிஜதனுவ பே3ரொந்து3
ரூபவ ஸ்ருஜிஸுவந்த3தி3
ஸூத்ரபா4ஷ்யவ
ஸ்ருஜிஸி பொரெத3ரு ஸத்யதீர்த்தரு ப3ரெத3ராபா4ஷ்ய ||34
த்விஜரு - பிராமணர்கள்; பிக்ஷெய நீடிதெல்லவ - பிக்ஷையில் கொடுத்த அனைத்தையும்; த்யஜிஸதெலெ - புறக்கணிக்காமல்; புஞ்சிஸி - ஏற்றுக்கொண்டு; மஹாமதி - சர்வக்ஞர்; ஆருஷாஸ்த்ரகளிதவர - ஆறு சாஸ்திரங்களை அறிந்தவர்களை; கெலிது - வென்று; விஜய படெதரு - வெற்றிவாகை சூடினார்; நிஜதனுவ - (மங்களகரமான) அவருடைய ரூபமே; பேரொந்து ரூபவ - இன்னொரு பிரதியாக; ஸ்ருஜிஸுவந்ததி - இருக்கிறது என்று எண்ணும்படியான; ஸூத்ரபாஷ்யவ - பிரம்ம ஸூத்ர பாஷ்யத்தை; ஸ்ருஜிஸி - படைத்து; பொரெதரு - அருளினார்; ஸத்யதீர்த்தரு - ஸத்யதீர்த்தர்; ஆ பாஷ்ய - அந்த பாஷ்யத்தை; பரெதரு - ஆவணப்படுத்தினார்.
ஸ்ரீமதாசார்யர், பிரம்மஸூத்ர பாஷ்யத்தை இயற்றும் அற்புத செயலை, இந்த ஸ்லோகத்தில் விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
பிராமணர்கள் பிக்ஷையில் கொடுத்த அனைத்தையும் புறக்கணிக்காமல் ஏற்றுக்கொண்டார். சர்வக்ஞரான ஆசார்யர், ஆறு சாஸ்திரங்களை அறிந்தவர்களை வென்று வெற்றி வாகை சூடினார். மங்களகரமான அவருடைய ரூபமே, இன்னொரு பிரதியாக இருக்கிறது என்று எண்ணும்படியான பிரம்ம ஸூத்ர பாஷ்யத்தை படைத்து அருளினார். ஸத்ய தீர்த்தர், அந்த பாஷ்யத்தை ஆவணப்படுத்தினார்.
மத்வ விஜயம் ஒன்பதாம் சர்க்கத்தில் வரும் ஆசார்யரின் மகிமைகள் இவ்வாறு.
அக்னிஷர்ம முக பஞ்சஷைர்த்விஜை: அன்னமாஹ்ருதமலம் ப்ருதக் ஸமம் |
க்ருத்ஸ்னமாததய மித்யவிஸ்மய: க்ருத்ஸமத்துமலமேஷ ஹி க்ஷயே || 9-7
பதரியில், அக்னிசர்மா முதலான 5-6 பிராமணர்கள் ஒரே காலத்தில் தனித்தனியாக சமர்ப்பித்த பிக்ஷையை ஏற்று அவர்களுக்கு வியப்பூட்டினார் ஆசார்யர். பிரளய காலத்தில் ஸ்ரீஹரியின் அருளால் அனைத்தையும் விழுங்கும் முக்யபிராணரின் அவதாரமான மத்வரின் விஷயத்தில் இது ஆச்சரியமே இல்லை.
வ்யாஸதேவ ஹ்ருதயாதி வல்லபம்
வாஸுதேவமகணய்ய ஸத்குணம் |
ஸாதயத ஸகல தோஷ வர்ஜிதம்
ஞான பக்தி தமனந்த ஸௌக்யதம் ||9-8
வேதவியாசருக்கு மிகவும் பிடித்தமான ஸ்ரீஹரியை நற்குணங்களைக் கொண்டவன், தோஷங்கள் அற்றவன் என்று நிரூபித்து, ஞானபக்திகளை வழங்கும் இந்த பாஷ்யம், நித்யசுகமான மோட்சத்தை தரவல்லதாகும். வேதவியாசரின் சூத்ரத்திற்கு ஒப்பான வேத வாக்கியத்தை சமர்ப்பித்து, வியாசரின் கருத்தை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது, ஆசார்யரின் பாஷ்யம்.
பால சங்கமபி போதயத்ப்ருஷம் துர்னிரூப வசனம் ச பண்டிதை: |
அப்ரமேய ஹ்ருதயம் பிரசாதவத் சௌம்யகாந்தி ச விபக்ஷ பீஷணம் || (9-10)
சாதாரணமானவர்களுக்கும் புரியுமாறும், முழுதும் அறிந்த பண்டிதர்களுக்கு புரியாத வகையிலும் இருக்கிறது இந்த பாஷ்யம். இதில் மிக எளிமையான சொற்களே உள்ளன, ஆனால் இதிலுள்ள விஷயங்கள் புரிந்துகொள்ள கடினமானவை. சஜ்ஜனர்களுக்கு இதமாகவும், துர்ஜனர்களுக்கு மிக பயங்கரமானதாகவும் இருக்கிறது..
அனைத்து தேவதைகளாலும் புகழப்பட்ட, அனைத்து லட்சணங்களும் பொருந்திய, தேவையற்ற எந்த ஒரு அதிகப்படியான சொல்லும் இல்லாத இந்த பாஷ்யமானது மிகவும் மங்களகரமானதாக இருக்கிறது. ‘ரூபமன்யதிவ தன்யமாத்மன: |’ ஆசார்யரின் ரூபம் 32 லட்சணங்களைக் கொண்டது. அவரின் இன்னொரு பிரதியே இந்த பாஷ்யம் என்று சொல்லலாம்.
காங்கமங்கள தரங்கபங்கத ப்ராந்த சுஸ்ரீஹரி வேஷ்ம க்ருத்ஸம: |
யத்கதைக தமவர்ண லேகக: சத்யதீர்த்த இஹ பாஷ்யமாலிகத் || (9-13)
ஆசார்யரின் பிரிய சிஷ்யரான சத்யதீர்த்தர் இந்த பாஷ்யத்தை முழுவதுமாக ஆவணப்படுத்தினார். இதன் ஒரே ஒரு எழுத்தினை எழுதுவதும் மிகப் பெரிய புண்ணியத்தைப் பெற்றுத் தரும். கங்கைக்கரையில் விஷ்ணுவிற்கு கோயில் கட்டினால் வரும் புண்ணியத்திற்கு இது ஒப்பாகும். அப்படியே சூத்ரகாரரான வியாசரின், பாஷ்யகாரரான ஆசார்யரின் மகிமை எத்தகையது என்று ஊகிப்பது சாத்தியமில்லை. அப்படியே சத்யதீர்த்தருக்கு ஆசார்யரின் அருளும் அபாரமானது ஆகும்.
ஸ்ரீஸ்ரீபாதராஜர், மத்வ நாமாவில் இதையே இவ்வாறு கூறியிருக்கிறார்.
ஏகவிம்ஷதி குபாஷ்யகள பேரனு தரித
ஸ்ரீகரார்ச்சிதனொலுமெ சாஸ்திரரசிஸி |
லோகத்ரயதொளித்த சுரரு ஆலிசுவந்தெ
ஆ கமலனாபாதி யதினிகரகொரெத ||26||
பிரம்மசூத்திரத்திற்கு அதுவரை இருந்த 21 குபாஷ்யங்களை கண்டித்து, ஸ்ரீவேதவியாசருக்கு சம்மதமான பிரம்மசூத்ர பாஷ்யத்தை இயற்றி மூன்று உலகங்களிலும் இருந்த தேவதைகளுக்கு அது போய் சேருமாறு, ஸ்ரீமத்வர், பத்பனாபதீர்த்தர் முதலான சிஷ்யர்களுக்கு அதனை உபதேசித்தார். ஸ்ரீமன் மத்வாசார்யர் இயற்றிய சூத்ரபாஷ்யத்திற்கு மோட்சத்தைக் கொடுக்கும் வல்லமை உண்டு. மோட்சம் கிடைப்பது ஸ்ரீஹரியின் அருளினாலேயே. அவன் மகிழ்ச்சியடைவது, அவனை சரியாக புரிந்து அவனிடம் நிஜமான பக்தி உண்டானால் மட்டுமே. அந்த பகவந்தனின் நற்குணங்களை சரியாக விளக்கி, பக்தியை உண்டாக்கி, பிறகு மோட்சத்தையும் கொடுக்கவல்ல சாமர்த்தியம் கொண்டது ஸ்ரீமன் மத்வரின் பிரம்மசூத்ர பாஷ்யம். அதற்காகவே ஸ்ரீபாதராஜர், ‘ஸ்ரீகரார்ச்சிதனொலுமெ சாஸ்திர’ என்று கூறினார்.
ஆசார்யரின் சூத்ரபாஷ்யம், வேதவேதாங்கங்கள் சொன்னதற்கு ஏற்ப உள்ளது. பாஷ்யத்தின் அனைத்து லட்சணங்களையும் கொண்டது. எவ்வித தோஷங்களும் அற்றது. தேவதைகளாலும் மதிக்கப்படுவது. 21 குபாஷ்யங்களையும் மறுத்துள்ளது. அதற்கு பின்னும் எவ்வித பாஷ்யங்களால் மறுக்கப்படாத அற்புத பாஷ்யமாகியுள்ளது.
மத்வ விஜய எட்டாம் சர்க்கத்தைப் பற்றியும், இந்த சர்க்கத்தைப் படிப்பதால் வரும் பலன்களைப் பற்றியும் மாதனூரு ஸ்ரீவிஷ்ணு தீர்த்தர், தமது ஸ்ரீமத் ஸுமத்வவிஜய ப்ரமேய பல மாலிகா கிருதியில் இவ்வாறு கூறுகிறார்.
ஸ்தா2னாந்தரே வ்யாஸமுகாச்ஸ்ருத்வா ஷாஸ்த்ரம் ததோ க3த:
|
ஏகவிம்ஷதிது3ர்பா4ஷ்ய க2ண்ட3னம் பா4ஷ்ய மாதனோத் ||10||
பெரிய பதரியில் ஸ்ரீவேதவியாசரின் முகத்திலிருந்து சாஸ்திரங்களைக் கேட்டு, பின்னர் அங்கிருந்து, கோதாவரி வழியாக, ரஜதபீடபுரத்திற்கு (உடுப்பிக்கு) வந்தார். 21 துர்பாஷ்யங்களைக் கண்டித்து (அவற்றில் இருந்த தோஷங்களைக் காட்டி), நிர்மலமான, திடமான, தம்முடைய பிரதிரூபத்தைப் போலிருக்கும், வலம்புரி சங்கினைப் போல இருக்கும், சிறப்பான, அனைத்து செல்வங்களையும் தரக்கூடியதான பாஷ்யத்தை இயற்றினார்.
விசார: ஸாத4னௌக4ஸ்ய ஞேயரூப ப்ரபோ3த4னம் |
உபாஸாயாமதிஷயோ தா3ர்ட்4யம் ப4க்திர்ஹரௌ கு3ரௌ ||19||
ஒன்பதாம் சர்க்கம் படிப்பதால் வரும் பலன் : ஸ்ரீஹரி குருகளில் திடமான பக்தி வளர்தல்
அடுத்த ஸ்லோகத்தில் ஸ்ரீமதாசார்யரின் திக்விஜயத்தை விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
***
No comments:
Post a Comment