ஸ்லோகம் #9: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ
இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்
தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[ஸ்லோகம் 9]
ஜனனிஜனகர ஸஹித பா3ந்த4வ ஜனர க்3ருஹகொ3ந்து3 தி3ன தெரளித3
ஜனதெ1யதி1 ஸம்ப்4ரமத3லிருதிரெ தரள ஹொரஹொரட |
வனவனவ
ஸஞ்சரிஸியல்லிஹ வனஜனாப4ன மந்தி3ரக3ளலி
த3ணிவு காணதெ3 ஹரிய நமிஸுத ஸிக்கித3னு பி1தகெ3 ||9
ஜனனி - தாய்; ஜனகர ஸஹித - தன் குடும்பத்தினருடன்; பாந்தவ ஜனர - தன் உறவினர்களின்; க்ருஹகெ - வீட்டிற்கு; ஒந்து தின - ஒரு நாள்; தெரளித - சென்றான்; ஜனதெ - அனைவரும்; அதி ஸம்ப்ரமதலிருதிரெ - ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு மகிழ்ந்திருக்க; வனஜனாபன - பத்மனாபனின்; மந்திரகளலி - கோயில்களில்; தணிவு காணதெ - சோர்வு இல்லாமல்; ஹரிய நமிஸுத - ஹரியை வணங்கிக் கொண்டிருந்த வாசுதேவன்; பிதகெ - தந்தைக்கு; ஸிக்கிதனு - கிடைத்தான்.
சிறுவன் வாசுதேவனின் பாலலீலைகளை ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர் தொடர்ந்து விளக்குகிறார்.
வாசுதேவன், தன் தாய், மற்றும் குடும்பத்தினருடன், தன் உறவினர்களின் வீட்டிற்கு ஒரு நாள் சென்றான். அங்கு அனைவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு மகிழ்ந்திருக்க, வாசுதேவன் வெளியேறினான். பிறகு, பத்மனாபனின் கோயிலில் வணங்கிக் கொண்டிருந்தபோது, தந்தைக்கு கிடைத்தான்.
மத்வ விஜயத்தில் இந்த சம்பவம் மூன்றாம் சர்க்கத்தில் 1ம் ஸ்லோகங்கத்திலிருந்து 15ம் ஸ்லோகம் வரை வர்ணிக்கப்பட்டுள்ளது.
அத கதாசன ஸுந்தர நந்தனஸ்மித
முகேந்து த்ருஷாம் தயிதௌ ந்ருணாம் || 3-1
நளினனாப நிபாலன
ஸம்மதாகம
விகஸ்வர பாஸ்வர லோசன: ||3-5
அயி ஸுதேதமுதா ஹர
தத்வதோ
நனு ஸமா கதவானஸி ஸாம்ப்ரதம் || 3-11
ஒருமுறை ஒரு திருமண நிகழ்ச்சிக்காக நடுவைரி என்னும் கிராமத்திற்கு அனைவரும் புறப்பட்டனர். அங்கு உற்சவத்தின் கொண்டாட்டம், குதூகலத்தில் தாய் மூழ்கினாள். வாசுதேவனுக்கு நேரம் போகவில்லை. த்ருவனைப் போல் வெளியே புறப்பட்டான். மூன்று வயதுக் குழந்தை தனியாகப் போவதைக் கண்டவர்களின் கேள்விக்கு ‘ஸ்மிதமனாகுலம் உத்தரமாதனோத்’ (3-3), கம்பீரமான சிரிப்பே பதிலாயிற்று. குடுமூரு என்னும் ஹரனின் கோயிலுக்குப் போய் வணங்கி, அங்கிருந்து தாளெகுட என்னும் கோயிலுக்கு வந்து நாராயணனை வணங்கினான்.
பிறகு ‘ரஜதபீடபுரம் பிரயயாவஸௌ’ (3-5) ரஜதபீடபுரம் (உடுப்பி) போய்ச் சேர்ந்தான். அங்கு அனந்தேஸ்வரனை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். இது 10 அஸ்வமேத யாகங்களைச் செய்த பலன்களை விட அதிக பலன்களைக் கொடுப்பதாக இருந்தது என்று தேவர்களும் பிராமணர்களும் கருதினர்.
தன் மகனே தன்னுடைய உலகம் என்றிருந்த மத்யகேஹர், அவனைக் காணாமல் வருந்தி தேடத் துவங்கினர். வழியில் கண்டவர்களிடம் கேட்டவாறு நடந்தார். நறுமணத்தைக் கண்ட தும்பி எவ்வளவு ஆனந்தப்படுமோ அப்படி தன் மகனின் சிரித்த முகத்தைக் கண்டதும் மத்யகேஹர் மகிழ்ச்சியடைந்தார். இதே சம்பவத்தை அடுத்த ஸ்லோகத்திலும் தொடர்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
மத்வ விஜய மூன்றாம் சர்க்கத்தைப் பற்றியும், இந்த சர்க்கத்தைப் படிப்பதால் வரும் பலன்களைப் பற்றியும் மாதனூரு ஸ்ரீவிஷ்ணு தீர்த்தர், தமது ஸ்ரீமத் ஸுமத்வவிஜய ப்ரமேய பல மாலிகா கிருதியில் இவ்வாறு கூறுகிறார்.
உபனீத: ஸுவிதி4னா ஸ்வபித்ராsதீ4தவான் த்3விஜாத் |
ப3ஹூன் வேதா3ன் க்ஷணேனைவ த்ருதீயே கதி2தம் த்வித3ம் ||4||
மூன்றாம் சர்க்கத்தில், சிறந்த பிராமணரான, தந்தையான, மத்யகேஹ பட்டர் மூலமாக, விதிப்படி, சிறப்பாக, உபநயன சம்ஸ்காரத்தைப் பெற்று, குருகுலவாசம் செய்து, மிகக் குறைந்த காலத்திலேயே அனேக வித வேதங்களின் அத்யயனத்தை செய்து, குருகளுக்கு ஐதரேய உபநிஷத்தின் அனேக ரகசிய ப்ரமேயங்களைக் கூறி, குருதட்சிணையாகக் கொடுத்தார்.
மூன்றாம் சர்க்கம் படிப்பதன் பலன் : ஸ்வரூப ஞானம் அடைதல்.
***
No comments:
Post a Comment