ஸ்லோகம் #40: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ
இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்
தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[ஸ்லோகம் 40]
ஹோதி3கெவஸனவு தோயத3ந்த3தி3 நதி3ய ப்ரவாஹவ தா3டி ப3ந்த3ரு
ம்ருது3லெ க3ங்கெ3யு பூஜிஸித3ளீத1னனு ப4குதியலி |
முத3கெ ஷிஷ்யர வ்ருந்த3வெல்லவ கத3னத3லி கெடு3ஹித3ரு பி4க்ஷவ
நொத3கி3ஸித3 ஷிவ த்4விஜன வேஷதி3 கா3னகுஷலரிகெ3 ||40
ஹோதிகெவஸனவு - உடுத்தியிந்த ஆடை; தோயதந்ததி - நனையாமல்; நதிய ப்ரவாஹவ தாடி - கங்கையை தாண்டி; பந்தரு - வந்தார்; ம்ருதுலெ - அழகான பெண் வடிவில்; கங்கெயு - கங்கை வந்து; ஈதனனு - ஸ்ரீமதாசார்யரை; பகுதியலி - பக்தியுடன்; பூஜிஸிதளு - பூஜித்து வணங்கினாள்; சிஷ்யர வ்ருந்தவெல்லவ - சிஷ்யர்கள் அனைவரையும்; கதனதலி - மல்யுத்தப் போட்டியில்; முதகெ - மகிழ்ச்சியுடன்; கெடுஹிதரு - தோற்கடித்தார்; கானகுஷலரிகெ - வேத பரிபாலனம் செய்பவரான ஸ்ரீமத்வருக்கு; ஷிவ - ருத்ரதேவர்; த்விஜன வேஷதி - பிராமண வேடத்தில்; பிக்ஷவனொதகிஸித - பிக்ஷையை கொடுக்கச் செய்தார்.
ஸ்ரீமதாசார்யர் தனது இரண்டாம் பதரி யாத்திரையை முடித்துக் கொண்டு, திரும்பி வரும் விஷயத்தை இந்த ஸ்லோகத்தில் விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
உடுத்தியிருந்த ஆடை நனையாமல், கங்கையைத் தாண்டி வந்தார். கங்கையானவள், அழகான ஒரு பெண் வடிவில் வந்து, இவரை பக்தியுடன் பூஜித்து வணங்கினாள். சிஷ்யர்களை மல்யுத்தப் போட்டியில் தோற்கடித்தார். வேத பரிபாலனம் செய்பவரான ஸ்ரீமத்வருக்கு, ருத்ரதேவர் பிராமண வேடத்தில் வந்து பிக்ஷையைக் கொடுக்கச் செய்தார்.
மத்வ விஜய பத்தாம் சர்க்க விஷயங்கள் இங்கும் தொடர்கின்றன.
பல தீர்த்தங்கள் மற்றும் க்ஷேத்திரங்களில் இருக்கும் ஸ்ரீஹரி ரூபங்களை வணங்கியவாறு, ஆசார்யர் தமது சிஷ்யர்களுடன் மறுபடி கங்கை நதிக்கரைக்கு வந்தார். ’தீர்த்தேஷு தீர்த்தேஷுச சௌக்ய தீர்த்த: க்ஷேத்ரேஷு ச க்ஷேத்ர விதாம் வரிஷ்ட: |’ (10-26) கங்கை வேகத்துடன் பாய்ந்து கொண்டிருந்தது. கடப்பதற்கு படகுகள் இல்லை. சூரியன் அஸ்தமிக்கும் நேரம். சிஷ்யர்கள் அங்கங்கே அமர்ந்துவிட்டனர். ஜலஸ்தம்ப வித்யையை அறிந்திருந்த ஸ்ரீமத்வர் அனாயாசமாக கங்கையைக் கடந்து அக்கரைக்குச் சென்றார். ஆசார்யரின் மகிமையை மறந்த சிஷ்யர், அவரைக் காணாமல் தேடினர். அவருக்கு என்னவாயிற்றோ என்று கவலைப்பட்டனர். ஹனுமந்தனாக கடலைத் தாண்டியது, பீமனாக கங்கை வெள்ளத்தில் ஓடியாடி விளையாடி என ஆசார்யரின் அவதாரங்களை மறந்தனர்.
பதம் பஷோர்வோ வினதா தனூஜ: தீர்த்வா நதீம் தாவததீன ஸத்வ: |
அனார்த்ரவாஸா: ஸ குதூஹலார்த்ரை: ந்ருதேவ பூதேவ முக்யைர்வவந்தெ ||10-30
ஆடைகூட நனையாமல் கங்கையை அனாயாசமாக கடந்துவந்த ஆசார்யரை, அந்தக் கரையிலிருந்த ராஜன் வியப்புடன் பார்த்தான். மக்கள் இவரை மகான் என்று அறிந்து வணங்கினர். பின், அரசன் படகுகளை ஏற்பாடு செய்து, ஆசார்யரின் சிஷ்யர்களை அந்தப்பக்கத்திலிருந்து வரச்செய்தான். கரையைக் கடந்து வந்த சிஷ்யர்கள், சபையில் புன்னகையுடன் வேதமூர்த்தி நான்முகப் பிரம்மனைப் போல அமர்ந்திருந்த ஆசார்யரைக் கண்டு வியப்புடன் மகிழ்ச்சியடைந்தனர்.
குரு ப்ரபர்ஹஸ்ய பதாரவிந்தம் விதூரத: ஸா ப்ரணநாம மூர்தா |
ஔதார்ய ஸௌந்தர்ய தனும் தனும் தாம் ஆலக்ஷ்ய சிஷ்யைரதி விஸ்மிதம் தை: ||10-36
கங்கைக் கரையிலிருந்த அஸ்தினாபுரத்திற்கு ஆசார்யர் பயணித்து, அங்கு சாதுர்மாஸ்ய விரதத்தை மேற்கொண்டார். கங்காதேவி ஆசார்யரை வந்து வணங்கினாள். மிக அழகான பெண் ரூபத்தில் வந்து வணங்கிய கங்காதேவியைக் கண்ட சிஷ்யர்கள் வியப்படைந்தனர். ருத்ராதி தேவர்களாலும், சரஸ்வதி பாரதியராலும் வணங்கப்படும் ஆசார்யரை, கங்காதேவி வந்து வணங்கியதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை.
ஒரு சமயம் சிஷ்யர்களுக்கு - ஆசார்யரைவிட தாம் இளையவர்கள். அவரைவிட அதிகபலம் பொருந்தியவர்கள் - என்ற எண்ணம் / கர்வம் தோன்றியது. அப்போது ஆசார்யர் தமது சிஷ்யர்களை ஒருசேர மல்யுத்தத்திற்கு அழைத்தார்.
நியுத்த ஸித்தை யுகபத்தி வீரம் மன்யா பவந்தோsபி பதந்து மாம் த்ராக் |
ஸமஸ்த ஷக்திம் ந யுனக்தி ய: ஸ்வாம் அத்ராஸ்மதாக்ஞாம் ஸ நிராகரோதி || 10-38
ஒரே நேரத்தில் ஆசார்யருடன் மல்யுத்தம் செய்ய வந்த சிஷ்யர்களை (15 வாலிப சிஷ்யர்கள்) தன் திறமையால் வென்று, சிரித்தவாறு ‘சாமர்த்தியம் இருந்தால் மேலே இழுங்கள்’ என்றார்.
ஸௌமேரவம் கௌரவமாவஹந்தி தவாங்கமங்காங்குலயஸ்ச நோsங்கே |
புரா வினஷ்யாம இதோ தயாளோ ஸ்வாமின் விமுஞ்ச்யேத்ய வதம்ஸ்ததா தே | (10-40).
குருவே, உங்களில் விரல்கள் எங்கள் மேல் மேருமலையைப் போல பாரமாக இருக்கின்றன. அதைத் தாங்க முடியாமல் நாங்கள் இறந்துவிடுவோம். எங்களை தயவு செய்து விடுவிக்கவும்’ என்று சிஷ்யர்கள் வேண்டினர். ஆசார்யரின் மகிமையை அறிந்து சிஷ்யர்கள் பிரமித்தனர். தன் கண் இமையினாலேயே ருத்ரர், இந்திரர் முதலான தேவர்கள் ஆளும் இந்த உலகத்தினை கட்டுப்படுத்தக்கூடிய வல்லமை பெற்ற ஆசார்யருக்கு, இந்த சிஷ்யர்கள் எம்மாத்திரம்?.
விப்ராத்மேஷ: க்ஷணார்த்தம் க்ருத நதிரஷிதி ஸ்ரீர்ஹ்ருஷிகேஷ தேஷே
ஸ்பஷ்டம் இஷ்டோsப்யத்ருஷ்ட: ஸபதி விஹிதவான் விஸ்மயம் தேஹ பாஜாம் |
ஸ்வப்னே ஸ்வ ப்ரேரிதான்ய ஸ்தல க நிஜ நரோ பாஹ்ருதைர்பக்ஷ்ய போஜ்யை:
ப்ராச்யை: ப்ராபோஜயத் ஸ்வம் குருமகில குரும் வேதயன் வேத பந்தும் || 10-50
தமது பயணத்தில் அடுத்து ஹ்ருஷிகேசத்திற்கு வந்தார் ஆசார்யர். அங்கு ருத்ரதேவர் ஒரு பிராமண ரூபத்தில் வந்து, அனைவரின் முன்னிலையில் ஆசார்யரை விழுந்து வணங்கி, அவரை பிக்ஷைக்கு அழைத்து, உடனே பார்வையிலிருந்து மறைந்தார். பிறகு இன்னொருவரின் கனவில் வந்த ருத்ரதேவர், அவனுக்கு ஆணையிட்டு, அவன் மூலமாக ஆசார்யருக்கு பிக்ஷை செய்வித்தார். அனைவருக்கும் குருவான மத்வர், தமக்கும் குருவானவர் என்று இதன்மூலம் ருத்ரதேவர் தெரிவித்தார்.
இத்துடன் மத்வ விஜய பத்தாம் சர்க்க விஷயங்கள் முடிவடைந்தன. அடுத்த ஸ்லோகத்திலிருந்து பதினோறாம் சர்க்க விஷயங்கள் வருகின்றன.
ஸ்ரீமதாசார்யரின் பாடம் எடுக்கும் சிறப்பினை அடுத்த ஸ்லோகத்தில் விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
***
No comments:
Post a Comment