ஸ்லோகம் #52: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ
இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்
தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[ஸ்லோகம் 52]
ப4வத3
தாபவ பரிஹரிஸி ப3லு ஜவதி3
மங்க3ளததிய நீடு3வ
ப4கவத3வதாரக3ள லீலாம்ருதவனுணிஸித3ரு
|
கவிவரேண்ய த்ரிவிக்ரமவர்யனு ஸவியனரிது1 மத்4வஷாஸ்த்ரத3
ஸுவினயதி3 பே3டி3த3னு கு3ருக3ள சரணதா3ஸ்யவனு ||52
பவத தாபத - சம்சார சுழற்சியின் கஷ்டங்களை; பரிஹரிஸி - பரிகரித்து; பலு ஜவதி - மிகவும் விரைவாக; மங்களததிய நீடுவ - மோட்சத்தையே கொடுப்பதான; பகவதவதாரகள - பகவத் அவதாரங்களின்; லீலாம்ருதவனு - லீலைகள் என்னும் அமிர்தத்தை; உணிஸிதரு - உண்வித்தார்; கவிவரேண்ய - அறிஞரான; த்ரிவிக்ரமவர்யனு - த்ரிவிக்ரம பண்டிதாசார்யர்; மத்வஷாஸ்த்ரத - மத்வ சாஸ்திரத்தின்; ஸவியனரிது - சுவையினை அறிந்து; குருகள - ஸ்ரீமதாசார்யரின்; சரணதாஸ்யவனு - தன்னை தாசனாக ஏற்றுக்கொள்ளுமாறு: ஸுவினயதி - மிக்க பக்தி மரியாதைகளுடன்; பேடிதனு - வேண்டிக் கொண்டார்.
த்ரிவிக்ரம பண்டிதாசார்யரின் வருகையை இந்த ஸ்லோகத்தில் விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
சம்சார சுழற்சியின் கஷ்டங்களை பரிகரித்து, மிகவும் விரைவாக மோட்சத்தையே கொடுப்பதான, பகவத் அவதாரங்களின் லீலைகள் என்னும் அமிர்தத்தை ஸ்ரீமதாசார்யர் உண்வித்தார். அறிஞரான த்ரிவிக்ரம பண்டிதாசார்யர், மத்வ சாஸ்திரத்தின் சுவையினை அறிந்து, ஸ்ரீமதாசார்யரின் தாசனாக தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு, மிக்க பக்தி மரியாதைகளுடன் வேண்டிக் கொண்டார்.
சர்வக்ஞ மத்வரின் சொற்பொழிவின் சிறப்பு அம்சங்கள் 13-40 ஸ்லோகம் முதல் விவரிக்கப்பட்டுள்ளது.
அவதத் ஸ கதாம் ரதாங்கபாணே: பகவான் பாகவதே பவாப ஹந்த்ரீம் |
அனுகூன குண ஸ்வராதி பாஜா நிஜ சிஷ்ய ப்ரவரேண வாச்யமானே || 13-40
பிறகு ஆசார்யர், விஷ்ணுமங்கள ஆலயத்தில் நுழைந்தார். பெரிய சபை. நரசிம்ம பூபாலன், பல அரசர்கள், அறிஞர்களுக்கு நடுவில் ஆசார்யர் நட்சத்திரங்களுக்கு நடுவே ஒளிரும் நிலவைப் போல காட்சியளித்தார். ஸ்ரீமதாசார்யரின் சிஷ்யரான ஹ்ருஷிகேச தீர்த்தர் பாகவத பிரவசனத்தை செய்ய, ஸ்ரீமதாசார்யர் ஸ்ரீகிருஷ்ணனின் கதையை மிகவும் அற்புதமாக சொற்பொழிவாற்றினார். இவரது பேச்சில் இருந்த உணர்ச்சிகளைக் கண்டு அனைவரும் மயங்கி மகிழ்ச்சியடைந்தனர். பண்டிதர்களுடன் பாமரர்களையும் இவரது சொற்பொழிவு அமிர்த சாகரத்தில் மூழ்கடித்தது.
கமனாசன சங்கதாதி லீலா: ஸ்ம்ருதி மாத்ரேண பவாபவர்க தாத்ரீ: |
கதமப்யமரா: ப்ரபஞ்சயேயு: நனு மத்வஸ்ய ந மாத்ருஷோSல்ப போதா: || (13-42)
ஜீவோத்தரமான ஸ்ரீமதாசார்யரின் வருகை, பேச்சு, சொற்பொழிவு ஆகிய லீலைகளை நினைத்த மாத்திரத்திலேயே சஜ்ஜனர்களுக்கு சம்சார துக்கம் களைந்து, நித்ய சுகமயமான மோட்சம் கிடைக்கிறது. மத்வரின் ஸ்மரணையே துக்கத்தைப் போக்கும்; ஞானானந்தங்களைக் கொடுக்கும்; இறுதியில் மோட்சமே கிடைக்கும். இத்தகைய மகிமை பொருந்தியவரின் லீலைகளை பாரதிதேவி, ருத்ராதிகளின் அருளால் தேவதைகள் மட்டுமே சொல்லவல்லர். என்னைப் போன்ற் சிறுமதியினர் எப்படி வர்ணிக்க முடியும் என்று மிகப் பணிவுடன், தழுதழுத்த குரலில் நாராயண பண்டிதர், ஆசார்யரைக் குறித்து விவரிக்கிறார்.
த்ரிவிக்ரம பண்டிதாசார்யரின் பின்னணி, மத்வ விஜயத்தில் 13-43 ஸ்லோகத்திலிருந்து தொடங்குகிறது.
ஸுதப: கவிதாதி ஸத்குணானாம் லிகுசானாம் குல ஜோsங்கிரோன்வயானாம் |
அபவத் குஹ நாமகோ விபஸ்சித் கவிவர்யோsகில வாதிவந்தனீய: ||13-43
லிகுச வம்சம் அங்கிரச கோத்ரத்தை சேர்ந்தவர் சுப்ரமண்யர். சிறந்த தவம் செய்துவந்த பண்டிதர். கவிஞர். இவரது மனைவி உத்தமள். கிருஷ்ணபக்தை. இவர்களுக்கு பல குழந்தைகள் பிறந்தாலும், யாரும் தங்கவில்லை. கவலைப்பட்ட தம்பதிகள் லோகேஸ்வரனான ஹரியை மற்றும் சங்கரநாராயணனை (ஹரிஹர) வேண்டினர். ஸ்ரீஹரியின் அருளால் ஒரு சிறந்த குழந்தையைப் பெற்றனர். இந்த குழந்தைக்கு சுப்ரமண்யர், ஜாதகர்மம் முதலான கர்மங்களை செய்து, த்ரிவிக்ரம என்று பெயரிட்டனர்.
கள பாஷண ஏவ சூரி போத: கவிராசீதனவத்ய பத்யவாதீ | (13-47) மழலைப் பேச்சின்போதே இந்தக் குழந்தை பிழைகளற்ற சமஸ்கிருத ஸ்லோகங்களை இயற்றும் ஆசு-கவியாக இருந்தான். தக்க சமயத்தில் உபநயனம், வேத அத்யயனம் ஆயிற்று. அனைத்து சாஸ்திரங்களிலும் தலைசிறந்தவனாக ஆனான். இப்படி அனைத்து மதங்களின் அறிஞர்களிடமும் நற்பெயர் பெற்றார். உஷாஹரண என்னும் நவரசங்கள் நிரம்பிய காவியத்தை படைத்தார்.
அதவேத புராண பாரதானி ஸ்வயமாலோச்ய யதாவபோத மத்ர |
குணவந்தம் உபாஸ்மஹே முகுந்தம் ஸ்ம்ருதி தர்மான் ஸ்புடமா சரந்த ஏவ || (13-60)
த்ரிவிக்ரம பண்டிதர், வேத சாஸ்திர புராணங்களின் சாரத்தை அறிந்தவராக, தமக்கு தெரிந்தவரையில், சகலகுண பரிபூர்ணனான முகுந்தனையும் மற்றும் ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லியவாறும் தன் கடமைகளைச் செய்து வந்தார். மத்வரிடம் ஏற்கனவே இருந்த தனது சகோதரன் அனுப்பியிருந்த மத்வரது கிரந்தங்களை, இரவு சமயங்களில் படித்து வியப்படைந்து உண்மையான அறிவினைப் பெற்றார். ஸ்ரீமதாசார்யரின் தத்வவாத மற்றும் அபூர்வமான வர்ணனைகளைப் படித்து, மனதில் மாத்வராகவே மாறிவிட்டார்.
பிறகு ஸ்ரீமதாசார்யரைக் கண்டு தம் மனதிலிருந்த சந்தேகங்களைப் போக்கி, ஸ்ரீமதாசார்யரின் சித்தாந்தமே தோஷங்கள் இல்லாதது என்று மெச்சினார்.
தம் விஷ்ணுமங்கலகதம் பஹள ப்ரபோதம் ப்ராப்யாம்யவந்தன தாsயுக விக்ரமார்ய: |
ஆனந்ததம் ஸ சதுரானன ஹாஸலக்ஷ்ம்யா தத்வம் ப்ரவேத்துமமரேந்த்ர இவாப்ஜ யோனிம் ||13-69
ஒருமுறை த்ரிவிக்ரம பண்டிதர், விஷ்ணுமங்களத்தில், சஜ்ஜனர்களுக்கு ஆனந்தத்தைக் கொடுக்கக்கூடிய, தசப்ரமதிகள் என்று அழைக்கப்பட்ட, ஸ்ரீபூர்ணப்ரக்ஞரிடத்தில் வந்து வணங்கினார். இது தேவேந்திரன் பரபிரம்ம தத்வங்களை அறிவதற்கு நான்முக பிரம்மனிடத்தில் வந்ததைப் போலிருந்தது.
இத்துடன் மத்வ விஜய பதிமூன்றாம் சர்க்க விஷயங்கள் முடிந்தன. அடுத்த ஸ்லோகத்திலிருந்து பதினான்காம் சர்க்க ஸாரம் துவங்குகிறது.
***
No comments:
Post a Comment