Thursday, April 14, 2022

ஸ்லோகம் #51: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #51: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[ஸ்லோகம் 51]

உத்தமர லக்ஷணக3ளலி மூவத்தெரடு3 மாத3ரிய தோருவ

மஸ்தகாதி3 நகா2ந்த ஸௌந்த3ர்யக3 பெ3ளகு3தலி |

ஷிஸ்தினலி 3ருதிருவ மூர்த்திய ஹத்திரதி3 நோடி33ரு ஜனக3ளு

ஸ்வஸ்தமானஸதி3ந்த3 பொக்கரு தே3வநிலயவனு ||51 

உத்தமர - உத்தமரின்; லக்ஷணகளலி - தேக லட்சணங்களில்; மூவத்தெரடு - 32; மாதரிய தோருவ - அனைத்தையும் காட்டும்; மஸ்தகாதி நகாந்த - தலை முதல் கால் நகம் வரை; ஸௌந்தர்யகள - அழகினை; பெளகுதலி - ஒளிர்வித்தவாறு; ஷிஸ்தினலி - கம்பீரமாக; பருதிருவ - வந்து கொண்டிருக்கும்; மூர்த்திய - ஸ்ரீமதாசார்யரின் தேகத்தை; ஜனகளு - மக்கள்; ஹத்திரதி நோடிதரு - அருகில் பார்த்தனர்; ஸ்வஸ்தமானஸதிந்த - தெளிவான மனதுடன்; தேவநிலயவனு - தேவாலயத்தை; பொக்கரு - அடைந்தனர். 

ஸ்ரீமதாசார்யரின் தோற்ற வர்ணனையை இந்த ஸ்லோகத்தில் விவரமாக கூறுகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

உத்தமரான 32 லட்சணங்களில் அனைத்தையும் பெற்று, தலை முதல் கால் நகம் வரை உள்ள அழகினை ஒளிர்வித்தவாறு, கம்பீரமாக வந்து கொண்டிருக்கும் ஆசார்யரின் தேகத்தை மக்கள் அருகில் பார்த்தனர். தெளிவான மனதுடன் தேவாலயத்தை அடைந்தனர். 

மத்வ விஜயத்தில் 13-25 முதல் 13-35 வரையிலான ஸ்லோகங்களில் பூர்ணபிரக்ஞரின் தோற்ற வர்ணனை செய்யப்பட்டுள்ளது. 

உதயசூரியனின் ஒளியைவிட அதிக ஒளிகொண்டவரான பூர்ணபிரக்ஞரின் நடை சிங்கத்தின் நடையைப் போல இருந்தது. அனைத்து சுப லட்சணங்களையும் கொண்டவரான ஸ்ரீமதாசார்யரை மக்கள் பார்த்த விதத்தை பண்டிதர் அழகாக வர்ணிக்கிறார். 

நக நிர்ஜித பத்மராக ராகம் வரகூர்ம ப்ரபதம் நிகூடகுல்பம் |

சுரவர்ய கராக்ர சேவ்ய ஜங்கம் த்விரதோதார கரோபமோரு யுக்மம் || (13-29) 

பத்மராக மணியைப் போன்ற கால் நகங்கள். ஆமையைப் போன்ற பாதங்கள். ருத்ராதி தேவதைகளும் வணங்கத்தக்க கால்கள், வலுவான இரு தொடைகள், யானையின் துதிக்கையைப் போன்று இருந்தன. தூய பட்டாடையை இடுப்பில் அணிந்திருந்தார். மெலிந்த வயிறு, கழுத்து மற்றும் நெற்றியில் மூன்று ரேகைகள் இருந்தன. விசாலமான மார்பு, பெரிய சுவரினைப் போன்ற தோள்கள், பெரிய, நீண்ட, வட்டமான அழகான தும்பிக்கையைப் போன்ற கைகள், அவரது உள்ளங்கை சிவப்பாக, த்வஜ, சக்ராங்கித போன்ற ரேகைகளைக் கொண்டிருந்தன. 

முதன்முதலில் பார்ப்பவர்கள் அவரது முகத்தை முழுநிலவோ என்று எண்ணுவர். பிறகு நிலவில் இருக்கும் குறைகள் இவர் முகத்தில் இல்லை என்று அறிவர். மத்வரின் சிரிப்பு மிகவும் அழகானது. அனைவரும் ஈர்க்கவல்லது. அவரது வரிசையான பற்கள், மல்லிகை மொட்டுக்களை போல அழகாக இருந்தன. உதடுகள் செக்கச் சிவந்திருந்தன. தாமரை இதழ்களைப் போன்ற பெரிய கண்கள். துளசி தரித்த பெரிய காதுகள். அழகான கன்னங்கள் இவற்றுடன் கூடிய ஸ்ரீமதாசார்யரை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டனர். 

மொத்தமாக சொல்லவேண்டுமெனில்சகலாவயவான் ஸ்புடம் மிமானா: ப்ரதிமா லக்ஷண லக்ஷணாய லக்ஷ்யம் |’ (13-36) லட்சண சாஸ்திரத்தில் சொல்லியவாறு அனைத்து உறுப்புகளையும் கொண்டிருந்தார் ஸ்ரீமதாசார்யர். கடவுளர்களின் சிலைகளுக்கான மாதிரிக்கான சரியான அளவுகளைக் கொண்டிருந்தார். ஆயிரக்கணக்கான மக்களுக்கு நடுவில் இருந்தாலும், சஜ்ஜனர்களின் மேலிருந்த கருணையால், மார்புக்கு மேலான பகுதியை அனைவருக்கும் தெரியுமாறு இருப்பார். 

இவரைக் கண்ட மக்கள் வியப்புடன், நாம் தன்யரானோம் என்று கருதினர். மத்வரின் சித்தாந்தமும் இவ்வாறு மக்களிடையே பரவத் துவங்கியது என அறியலாம். 

த்ரிவிக்ரம பண்டிதாசார்யரின் வருகையை அடுத்த ஸ்லோகத்தில் விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

***

 

No comments:

Post a Comment