Tuesday, May 3, 2022

அறிமுகப் பதிவு-2: ஹரிதாஸ தர்பண

அறிமுகப் பதிவு-2: ஹரிதாஸ தர்பண

கிருதி: ஹரிதாஸ தர்பண

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

குரு: ஸ்ரீதந்தெமுத்து மோகனதாஸர்

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

ஸ்ரீரமாகாந்த விட்டலதாசர்

20ம் நூற்றாண்டின் மிக முக்கியமான ஹரிதாசரான ஸ்ரீதந்தெ முத்துமோகன விட்டலதாசரின் சிஷ்யர்களில் ஒருவரே ஸ்ரீரமாகாந்த விட்டலதாசர். குருகளிடமிருந்து தனது இள வயதிலேயே அங்கித உபதேசத்தைப் பெற்று, லௌகிகத்தில் ரெயில்வே பணியில் இருந்தாலும், ஹரிதாச சாகித்ய சேவைக்கு தம் வாழ்க்கையையே அர்ப்பணித்து, சம்சாரத்தின் சுக துக்கங்களில் ஈடுபடாமல், நிர்லிப்தராக இருந்து, வந்ததெல்லாம் ஸ்ரீஹரி கொடுத்தது என்று, சம-சித்தத்தினால் ஏற்றுக்கொண்ட ஸாதகர் ஸ்ரீரமாகாந்த விட்டலதாசர். ஸாதுகுலதிலக, கீர்த்தன சதுர - போன்ற விருதுகளை தாசர் பெற்றிருந்தார். 

ஸ்ரீரமாகாந்த விட்டலதாசர் 1906-1984ம் ஆண்டு வரையிலான தனது 78 ஆண்டுகள் வாழ்க்கையில், தாசர் எந்தவொரு புகழ், பெயர்களுக்கும் விருப்பமே பட்டதில்லை. யாருடைய தயவையும் விரும்பாமல் வாழ்ந்தவர். மௌனமாக ஹரிதியானம் செய்தவாறு, இலைமறை காய் போல, வாழ்க்கை நடத்தியவர். ‘ஹெண்டரு மக்களு நின்ன தொண்டரெம்பவரு’ என்னும் ஸ்ரீஜகன்னாததாசரின் வாக்கியத்தின்படி, தம் குடும்பத்தையே ஹரியின் கைங்கர்யத்தில் ஈடுபடுத்தியவர். கால நாமக பரமாத்மனின் மகிமையை புரிந்துகொண்டு ஒவ்வொரு நொடியையும் ஹரிசிந்தனையில், பயனுள்ளதாக ஆக்கிக்கொண்டவர். அத்துடன், தமது விலைமதிப்பற்ற ஆத்யாத்மிக அனுபவங்களை எழுதி, அடுத்த பரம்பரையினருக்கு மிகப்பெரிய உதவியை செய்தவர். 

பிறப்பு & இளமைக்காலம்

சள்ளகெரெ கிருஷ்ணராயர் என்பது அவரது இயற்பெயர். சள்ளகெரெயில் ஸ்ரீபீமசேனராவ் மற்றும் பாரதிபாய் தம்பதிகளுக்கு 1906ம் ஆண்டில் மகனாகப் பிறந்தார். ஆத்ரேய கோத்ரம். மந்திராலய ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளின் மடத்தை சேர்ந்தவர்கள் இவர்கள். ரமாகாந்த விட்டலதாசரின் பாட்டி, ருக்மிணி பாய், பரம தெய்வபக்தி கொண்டவர். ஸ்ரீவிஜயதாசரின் பாவன பரம்பரையில் வந்த தேவராயனதுர்காவின் ‘பரமப்ரிய’ ஸ்ரீதந்தெ முத்துமோகன விட்டலதாசரிடமிருந்து, அவரது அருளைப் பெற்று ‘ஸீதாபதி விட்டலா’ என்னும் அங்கிதத்தைப் பெற்று, அனேக ஹரிகீர்த்தனைகளை சிரத்தையுடன் பாடிக் கொண்டிருந்தார். விரத, நியம, உபவாஸங்களை மிகுந்த நிஷ்டையுடன் செய்து வந்தார். சர்வாந்தர்யாமியான தனது பிம்பமூர்த்தியை, எப்போதும் சிந்தித்துக் கொண்டிருந்தார். தினமும் பாகவதாதி புராணங்களின் சிரவணத்தை செய்தவாறு, தேவ, பிராமணர்களின் சேவையில் ஈடுபட்டிருந்தார். 

வ்ரதநேம உபவாஸ ஸதததிக்கெயுத

க்‌ஷிதிவார்த்தெகெளஸாதெ மனவன்னெ ஸெளெது

ஹரிபாதக்கெரெது ஹிதவன்னெ மரெது |


பாகவதாதி ஸச்சாஸ்திர ஸ்ரவணகெய்து

ஜாக்ரதளாகி பூஸுரர ஸேவெயலி

ஸூக்ததர்மதலி புண்ய களிஸுதலி |


உச்சஸ்வரதி நீனு பாடித்ஹாடுகளிந்து

அச்சளியதெ நம்ம ஸ்மரணெயொள்ளிந்து

ஹருஷவனாந்து மரெயுவுதெந்து |

என்று ஸ்ரீரமாகாந்த விட்டலதாசரின் அக்காவான ஸ்ரீகோபால கிருஷ்ண விட்டல அங்கிதத்தைப் பெற்றவரான அம்பாபாய் அவர்கள், தமது பாட்டியைக் குறித்து இயற்றிய பதத்தில் இந்த அனைத்து விஷயங்களையும் தெளிவாக பாடியுள்ளார். தமது குடும்பத்தினரின் ஸாத்விக ஸ்வபாவத்தை இவ்வாறாக வர்ணித்துள்ளார். 

மூத்தவர்களின் ஸதாசாரத்தினால், வீட்டில் எப்போதும் தார்மிக நிலைமையே இருந்தது. இது ரமாகாந்த விட்டலதாசரின் சிறிய வயதிலிருந்தே அவருக்குள் ஒரு மாற்றத்தை உருவாக்கியது. பாட்டியிடமிருந்து ராமாயண, மகாபாரத, பாகவத ஆகிய தார்மிக கிரந்தங்களை பற்றி கேட்டு அறிந்து கொண்டிருந்தார். பாட்டி ருக்மிணி பாய் அவர்களை, தாசர் அவரது கடைசி காலம் வரை, தமது வீட்டிலேயே வைத்திருந்து அவரை பார்த்துக் கொண்டிருந்தார். தம் பாட்டி அவர்களின் கடைசி சம்ஸ்காரத்தையும், தாமே சிரத்தையுடன் செய்தார். பாட்டி மற்றும் அக்கா அம்பாபாய் அவர்களின் பக்தி, சிரத்தைகள், தாசரின் வாழ்க்கையிலும் அப்படியே தொடர்ந்தது மற்றும் அவரது கிருதிகளிலும் அவை வெளிவந்தன என்பதை நாம் கவனிக்கலாம். 

கிருஷ்ண ராயருக்கு எட்டாம் வயதில் உபநயனம் ஆயிற்று. ஸந்த்யாவந்தனம், தேவபூஜை ஆகிய நித்ய கர்மங்களை முறையே கற்று, செய்து வந்தார். தம் வாழ்க்கையின் கடைசி வரைக்கும் இந்த நித்ய கர்மங்களை தாசர் விடவில்லை. பாகவத ஆராதனையில் சிறிதும் சோர்வு காட்டவில்லை. ஏகாதசி விரதத்தை அவர் தவறவிட்டதேயில்லை (ஏகாதசியன்றே அவரது உயிரும் பிரிந்தது).

தமது 17ம் வயதில், 1923ம் ஆண்டில், சுந்தரம்மா என்னும் ஸாத்வியை ஸ்ரீகிருஷ்ணராயர் திருமணம் புரிந்து கொண்டார். சுந்தரம்மாகூட அதிக தெய்வபக்தியைக் கொண்டிருந்தார். நற்சம்பிரதாயத்தைக் கொண்டிருந்த குடும்பத்திலிருந்து வந்திருந்த அவருக்கு, விரத, நியமாதி ஆசரணைகளின் அற்புதமான சிரத்தை இருந்தது. வீட்டிற்கு வந்த அதிதிகளை, கடவுளைப் போல கண்டு உபசாரம் செய்வதில் அவர் சிறந்தவராக இருந்தார். கணவன் மனைவி இருவரின் குண ஸ்வபாவங்களும் இவ்வாறாக அருமையாக பொருந்திப் போயின. கணவருடன் சேர்ந்து மனைவியும் அவருடைய அனைத்து தார்மிக காரியங்களில் சம பங்கு வகிப்பவர் ஆனார். 

(தொடரும்)

***

No comments:

Post a Comment